பொது வேட்பாளராக களமிறங்க ரணில் திட்டம்?: மகிந்த கட்சியின் நிலைப்பாடு
ஜனாதிபதித் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் அடுத்த மாதம் நடுப்பகுதியில் அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
ஹொரணையில் நேற்று முன்தினம் (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி வேட்பாளராக பலரின் பெயர்கள் பரிசீலனைக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அறிவித்துள்ளதாக வார இறுதிப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜூன் 6 ஆம் திகதி பத்தரமுல்லையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நாடாளுமன்ற பின்வரிசை உறுப்பினர்களுக்கான நிகழ்வின் போதே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சிறுபான்மை கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை ஒன்றிணைக்க வேண்டியிருப்பதால், தான் நிச்சயமாக பொது வேட்பாளராக போட்டியிடுவேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதனிடையே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு – 3, மலர் வீதியில் தனது அரசியல் கட்சி அலுவலகத்தை ஜூன் ஆறாம் திகதி திறந்து வைத்துள்ளார்.
எவ்வாறாயினும், செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரையான கால்பகுதிக்குள் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.