ஜேவிபியின் மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது
முன்னாள் சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் ரவிசெனவிரட்ணவும் சிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபயசேகரவும் ஜேவிபியின் மஹரகம மாநாட்டில் கலந்துகொள்வதை தடுப்பதற்காக அரசாங்கத்தை சேர்ந்தவர்களும் எதிர்கட்சியை சேர்ந்தவர்களும் கடும் அழுத்தங்களை கொடுத்தனர் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசியலின் இரு துருவங்களை சேர்ந்தவர்களும் மிரட்டல்கள் உட்பட பல வழிகளில் அழுத்தங்களை கொடுத்தனர் எனவும் தெரிவித்துள்ள அவர் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தற்போதும் ரவிசெனிவரட்ணவிற்கு எதிராக விசாரணைகள் இடம்பெறுகின்றன அரசாங்கம் இந்த தீயநோக்கம் கொண்ட நடவடிக்;கையை நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்துள்ளார்.
பொதுமக்களிற்கு தங்கள் விருப்பத்திற்குரிய எந்த கட்சிக்கும் ஆதரவளிப்பதற்கான உரிமையுள்ளது அதற்கு அவர்கள் அரசாங்கத்தினதும் எதிர்கட்சியினதும் ஆதரவை பெறத்தேவையில்லை என குறிப்பிட்டுள்ள ஜேவிபியின் தலைவர் அரசாங்கத்தினதும் எதிர்கட்சியினதும் செயற்பாடுகளை இவர்கள் நன்கு அறிந்தவர்கள் என்பதால் இவர்களிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த அழுத்தங்களிற்கு அப்பால் அவர்கள் துணிச்சலாக மக்கள் முன்பேசுவதற்கு முன்வந்துள்ளனர்,அவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளதுடன் நாட்டில் சட்டத்தின் ஆட்சிக்கு என்ன நடந்தது என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.