இந்தியாவின் அயலகத்திற்கு முதலிடம் கொள்கையில் இலங்கைக்கு எப்போதும் முதலிடம்; நேரில் வாழ்த்து கூறிய ஜனாதிபதி ரணிலிடம் பிரதமர் மோடி தெரிவிப்பு

இந்தியாவின் அயலகத்திற்கு முதலிடம் கொள்கையில் இலங்கைக்கு எப்போதும் முதலிடம்; நேரில் வாழ்த்து கூறிய ஜனாதிபதி ரணிலிடம் பிரதமர் மோடி தெரிவிப்பு

அனைத்து துறைசார் வளர்ச்சியிலும் இந்திய மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் தேர்தல் வெற்றி அமைந்துள்ளது. இந்தியாவுடனான கூட்டுறவை மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ராஷ்டிரபதி பவனில் இடம்பெற்ற பிரதமர் நரேந்திர மோடியின்  பதவிப்பிரமான நிகழ்வில் கலந்துக்கொண்டு வாழ்த்துக்களை கூறினார். 

ஜனாதிபதி ரணிலின் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்த  பிரதமர் நரேந்திர மோடி, அயலகத்திற்கு முதலிடம் கொள்கையில் இலங்கை மிகவும் முக்கியமானதொரு பங்காளியாக உள்ளது என்றும்  சகல பரிமாணங்களிலும் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான இருதரப்பு  கூட்டு தொலைநோக்கினை நனவாக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும்  தெரிவித்துள்ளார். 

உலகின் மிகப் பெரிய ஜனநாயக தேர்தலான இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடிய நிலையில், தொடர்ந்தும் 3ஆவது முறையாக பாரதப் பிரதமராக நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (9) மாலை 7:21 சுப நேரத்தில் பதவியேற்றுக் கொண்டார். இதற்கான உத்தியோகபூர்வ பிரம்மாண்ட நிகழ்வு பன்னாட்டு தலைவர்கள் உள்ளிட்ட 9000 இராதந்திரிகளின் பங்கேற்புடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை புதுடில்லியிலுள்ள ராஷ்டிரபதி பவனில் இடம்பெற்றது. 

அமைச்சரவை அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின்  கட்கரி, ஜகத் பிரகாஷ் நட்டா, சிவராஜ் சிங் சொவான், நிர்மலா சீதாராமன், எஸ். ஜெய்சங்கர், மனோகர் லால் , எச். டி. குமாரசுவாமி,  பியூஸ் கோயல்,  தர்மேந்திர பிரதான், ஜீத்தன் ராம் மஜ்ஜி, ரஜிவ் ரஞ்சன் சிங், சர்பானந்தா சோனோவால்,  வீரேந்திர குமார்,  கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு , பிரகலாத் வெங்கடேஷ் ஜோஷி, ஜுவல் ஓரம், கிரிராஜ் சிங், வைஷ்ணவி வைஷ்ணவ், ஆகியோரும் இதன் போது  பதவிப்பிரமானம் செய்துக்கொண்டனர். 

கடும் பாதுகாப்புகளுக்கு மத்தியில் கோலாகல ஏற்பாடுகளுடன் தலைநகர் டில்லி விழாக் கோலம் பூண்டிருந்தது. 44 நாட்களாக 7 கட்டங்களாக இடம்பெற்ற உலகின் மிகப் பெரிய ஜனநாயக தேர்தலாகக் கருதப்படும் இந்திய பொதுத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான கூட்டணி வெற்றியை தமதாக்கிக் கொண்டது. மோடியின் கட்சி உட்பட தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து வெற்றி பெற்ற மூன்றாவது பொதுத் தேர்தலாக இது பதிவுகளில் இணைந்துள்ளது. வெற்றி உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராகவும் உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யப்பட்டார். 

9000 இராஜதந்திரிகள் பங்கேற்பு 

ஜனாதிபதி திரௌபதி முர்மு, புதிய அரசாங்கத்தை வழிநடத்தி, தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடியை நியமித்தார். அதற்கமைய இந்திய பிரதமர் மோடியின் உத்தியோகபூர்வ பதவியேற்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அயல் நாடுகளின் தலைவர்கள் உட்பட சுமார் 9000 இராஜதந்திரிகள்  அதற்காக அழைக்கப்பட்டிருந்தனர். 

குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முஹம்மது முயிசு, சிசெல்ஸ் துணை ஜனாதிபதி அகமத் ஆபிப், பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனா, மொரிசியஸ் பிரதமர் பிரவீந் குமார் ஜக்நாத், நேபாள பிரதமர் புஷ்ப கமால் தஹல் பிரசண்டா மற்றும் பூட்டான் பிரதமர் சேரிங் டொப்கே ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர். 

ஜனாதிபதி ரணிலின் வருகையும், வரவேற்பும்

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.20க்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏ.ஐ.282 விமானம் மூலம் புறப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தூதுக்குழு, நண்பகல் 12 மணியளவில் டில்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. 

இந்திய வெளிவிவகார மேலதிக செயலாளர் பி.குமரன், சிறப்பு பணி அதிகாரி புனீத் அகர்வால், இந்து சமுத்திர பிராந்தியத்துக்கான மேலதிக செயலாளர், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஷேனுகா செனவிரத்ன மற்றும் நெறிமுறைத் தலைவர் அன்ஷூமன் கவுர் ஆகியோர் ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழுவினரை வரவேற்றனர். இந்திய பாரம்பரிய நடனத்துடன் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. 

ஜனாதிபதியுடனான இந்த விஜயத்தில் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சென்ட்ரா பெரேரா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். 

தொடர்ந்து அங்கிருந்து அவர்கள் பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ராஷ்ரபதி பவன் நோக்கிச் சென்றனர். செல்லும் வழியில் ஜனாதிபதி ரணில் உட்பட, ஏனைய தலைவர்களினதும் புகைப்படத்துடன் பாரிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ராஷ்ரபதி பவனில் நெறிமுறைத் தலைவர் மற்றும் ஜனாதிபதியின் பிரதி இராணுவ செயலாளர் ஆகியோரால் ஜனாதிபதி வரவேற்கப்பட்டு அவருக்காக ஒதுக்கப்பட்டிருந்த சிறப்பு இருக்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

பின்னர் இந்திய ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் அங்கு வருகை தந்திருந்த பன்னாட்டு தலைவர்களும் குழு புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். அத்தோடு அங்கு வருகை தந்த தலைவர்களை ஒவ்வொருவராக பிரதமர் மோடி வரவேற்றதோடு, கூட்டு உரையாடல்களிலும் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து இந்திய ஜனாதிபதியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரச விருந்து சகல தலைவர்களினதும் பங்கேற்புடன் பிரம்மாண்டமாக இடம்பெற்றது. 

டில்லியில் கடும் பாதுகாப்பு 

பிரதமரின் பதவியேற்பு நிகழ்வையொட்டி புதுடில்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அதற்கமைய இரு தினங்களும் நகரில் விசேட நடமாடும் கண்காணிப்பு சேவை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்ததோடு, தலைநகர் ஊடான விமான சேவைக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் இராதந்திரிகள் தங்கியிருந்த ஹோட்டல்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. 

மேலும், டில்லியில் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்ததோடு, ராஷ்டிரபதி பவனைச் சுற்றி கமாண்டோ அதிகாரிகள் மற்றும் துப்பாக்கி சுடும் வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். குறிப்பாக அப்பகுதியில் 24 மணித்தியாலங்களும் ட்ரோன்கள் கமராக்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. 

இந்நிலையில், மோடி மீண்டும் இந்தியப் பிரதமராக பதவியேற்றதைக் கொண்டாடும் வகையில் அமெரிக்காவின் நியூயார்க் உள்ளிட்ட 22 நகரங்களில் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This