ஜனாதிபதியிடம் சலுகைகளை பெறும் தமிழ் அரசியல்வாதிகள்; தமிழரின் வாக்குகளை பிரிப்பதற்குத் தந்திரம்

ஜனாதிபதியிடம் சலுகைகளை பெறும் தமிழ் அரசியல்வாதிகள்; தமிழரின் வாக்குகளை பிரிப்பதற்குத் தந்திரம்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக ஜனாதிபதியினால் வடக்கு,கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு மதுபான சாலைகளுக்கான அனுமதிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டிய இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான இரா.சாணக்கியன், தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் ஜனாதிபதி ரணில் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த நாட்டின் ஜனாதிபதி யார் என்பதனை தமிழ் மக்களின் வாக்குகள்தான் தீர்மானிக்கும் .இதனால்தான் தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதற்கான தந்திரங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் தமிழ் மக்கள் மிக தெளிவாக இருக்கின்றார்கள் .நீங்கள் கூட்டாக சேர்த்துக்கொண்டிருக்கும் கொலைகார பாவிகளை ,உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளை மடியில் வைத்திருக்கும் எந்தவொருவரும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று விட முடியாது எனவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

இந்த தேசத்தின் கடன் மறுசீரமைப்பு ,தேசத்தை கட்டியெழுப்புதல் போன்ற பல விடயங்கள் பலராலும் இங்கு பேசப்படுகின்றன. இதில் வேடிக்கையான விடயமாக இந்த நாட்டிடை வங்குரோத்து நிலைக்கு கொண்டு செல்ல பெரும் பங்கு வகித்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கூட நாட்டைக் கட்டியெழுப்புவது தொடர்பில் பேசுகின்றார்.

1948 ஆம் ஆண்டுநாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது முதல் தமிழ் மக்களுக்கு நடந்த ஒவ்வொரு அநீதியும் இந்த நாட்டிற்கு ஏற்பட்டுள்ள சாபமாகவே இருக்கின்றது. தமிழ் மக்களுக்கு செய்த அநீதிகளுக்கு பிராயச்சித்தம் செய்யும் வரையில் ,தமிழ் மக்களுக்கு சம அந்தஸ்து வழங்கும் வரையில், தமிழ் மக்களின் முழுமையான தீர்வு வழங்கும் வரையில் தமிழ் மக்களும் தேசிய இனம் என்ற அங்கீகாரம் வழங்கும் வரையில் இந்த நாட்டிடை கட்டியெழுப்புவது என்பது பெரும்பானமையின் மக்களுக்கும் பெரும்பான்மையின் அரசியல்வாதிகளுக்கும் ஒரு கனவாகவே இருக்கும்

பாராளுமன்றத்தில் எந்த சட்டமூலங்களை கொண்டு வந்தாலும் ஐ.எம்.எப்.நிபந்தனைகள், கடன் மறுசீரமைப்புக்கள் பற்றி பேசினாலும் தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கும் வரை- கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான தமிழ் மக்களுக்கு நீதி வழங்கும் வரை இந்த நாட்டுக்கு விடிவு காலம் வரவே வராது.

நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் வரப்போகின்றது.அதில் அதிக வாக்குகளை எடுக்க வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க விரும்புவோர் போலி வாக்குறுதிகளை வழங்குகின்றனர். சில தமிழ் அரசியல்வாதிகளும் கூட இந்த ஜனாதிபதி வேட்பாளர்களுடைய முக்கியமாக ஜனாதிபதியின் சலுகைகளைப் பெற்று ஜனாதிபதியை ஆதரிக்கின்ற நிலைக்கு தமிழ் மக்களை தள்ள முடியும் என்ற கற்பனையில் இருக்கின்றார்கள். சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாக நாம் அறிகின்றோம். வடக்கு,கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம். அதில் ஒரு சிலர் ஜனாதிபதி ஊடகப்பிரிவு ஒரு அறிக்கை விட்டு இரு மணித்தியாலங்களுக்குள் அவர்கள் ஜனாதிபதி சொன்ன அதே அறிக்கையை தமிழ் மொழியில் தங்கள் வார்த்தையில் மீண்டும் வலியுறுத்திச் சொல்கின்றார்கள்.

யுத்தம் மௌனிக்கப்பட்டு 15 வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. கடந்த காலத்தில் தற்போது இருக்கும் ஜனாதிபதி ,தான் பிரதமராக இருந்தபோது அப்போதைய ஜனாதிபதி தன்னை காலால் இழுத்தார் , கையால் இழுத்தார் அதனால் என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்று சொன்னார். இன்று அவர் நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக உள்ளார். சர்ச்சைக்குரிய சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுகின்றார். ஆனால் தமிழ் மக்களின் பிரச்ச்சினைகள் தொடர்பாக எங்களை பேச்சுக்கு அழைத்து கலந்துரையாடிய விடயங்களில் எதனையும் செய்யவில்லை. அரைத்த மாவையே திருப்பியும் அரைத்துக் கொண்டிருக்கின்றார்.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க மறுக்கும் இந்த நாட்டின் ஜனாதிபதிகள் பெண்ணை கொடூரமாக கொலை செய்தவருக்கு பொது மன்னிப்பு வழங்குகின்றனர். தமிழ் அரசியல் கைதிகள் சங்கிலி அறுத்தோ, போதைவஸ்து கடத்தியோ சிறைக்குச் செல்லவில்லை. தமது கொள்கைக்காகவே சிறை சென்றார்கள்.

இந்த நாட்டின் ஜனாதிபதி யார் என்பதனை தமிழ் மக்களின் வாக்குகள்தான் தீர்மானிக்கும் .இதனால்தான் தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதற்கான தந்திரங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் தமிழ் மக்கள் மிகத் தெளிவாக இருக்கின்றார்கள் .நீங்கள் கூட்டாக சேர்த்துக்கொண்டிருக்கும் கொலைகாரப் பாவிகளை ,உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளை மடியில் வைத்திருக்கும் எந்தவொருவரும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று விட முடியாது.அவ்வாறு நினைத்தால் அது பகல் கனவாகவே இருக்கும் என்றார்.

CATEGORIES
Share This