உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 27,000 பேர் மூன்று பாடங்களிலும் சித்தியடையவில்லை!
இந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 10.04 வீதமானவர்கள் சகல பாடங்களிலும் சித்தியடைந்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதேவேளை பரீட்சைக்கு தோற்றிய 269,613 விண்ணப்பதாரர்களில் 27,970 பேர் சகல பாடங்களிலும் சித்தியடையவில்லை என்றும் பரீட்சை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார் .
இவ்வருட பரீட்சை பெறுபேறுகள் சாதனை அதிகரிப்பை காட்டுவதாக தெரிவித்த அவர், விண்ணப்பித்தவர்களில் 173,444 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாகவும் இது 64.33 வீதமாகும் எனவும் தெரிவித்தார்.
மூன்று பாடங்களிலும் 10,484 பரீட்சார்த்திகள் சித்தியடைந்துள்ளதாகவும், இது 3.9 வீதமாகும் எனவும் ஜெயசுந்தர தெரிவித்தார்.
இவ்வருடம் பரீட்சைக்குத் தோற்றிய 190 விண்ணப்பதாரர்களின் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 146 தனியார் விண்ணப்பதாரர்களும் 44 பாடசாலை விண்ணப்பதாரர்களும் உள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார் .
2023 உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களில் ஆண் பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை வீழ்ச்சியையும் பெண் பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை அதிகரிப்பையும் காட்டுவதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
மேலும், பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்களில் 27,000 பேர் மூன்று பாடங்களிலும் சித்தியடையாமை இலங்கைக் கல்வி முறைமையில் பாரிய பின்னடைவை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உயர்தர மீள் கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்காக பரீட்சை திணைக்களத்தின் ஒன்லைன் முறையானது ஜூன் மாதம் 5 ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை திறக்கப்படும் எனவும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 229,057 பாடசாலை பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளதோடு 40,556 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.