ஐக்கிய தேசியக் கட்சியின் அறிவிப்பால் கொழும்பு அரசியலில் குழப்பம்; ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஒத்திவைக்கப்படுமா?
ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தலை இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் கோரிக்கையை அடுத்து கொழும்பு அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதனை நிராகரித்துள்ளன.
இது குறித்து விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை நேற்று மாலை தொடர்புகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தலை ஒத்திவைக்கும் எந்த தீர்மானமும் இல்லையென ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், “இது பாலித ரங்கே பண்டாரவின் தனிப்பட்ட அறிக்கையே அன்றி வேறில்லை. இது ஜனாதிபதியின் முடிவு அல்ல” என ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் மாதம் திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தலும், அதனைத் தொடர்ந்து பொதுத் தேர்தலும் நடத்தப்படும் என கருணாநாயக்க வலியுறுத்தினார்.
ஜனாதிபதித் தேர்தலையோ, நாடாளுமன்றத் தேர்தலையோ நடத்தாது ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாலித ரங்கே பண்டார தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், இந்த அறிவிப்பு வெளியானதும் அனைத்து அரசியல் கட்சிகளுக்குள்ளும் குழப்பம் வெடித்துள்ளதாக அறிய முடிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் விக்கிரமசிங்க பொதுச் செயலாளர் மூலம் பொதுமக்களின் எதிர்வினையை அறிந்துகொள்ள இந்த அறிக்கையை வெளியிட்டாரா என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, அத்தகைய நடவடிக்கைக்கு தாங்கள் உடன்பட மாட்டோம் என்றும் ஜனாதிபதி அத்தகைய முடிவை எடுக்க மாட்டார் என்றும் நம்புவதாகவும் கூறியிருந்தார்.
மேலும், இவ்வாறானதொரு நகர்வு குறித்து ஜனாதிபதி எங்களுடன் கலந்துரையாடவில்லை எனவும், ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர் என்ற வகையில் அவர் அவ்வாறானதொரு முடிவை எடுக்கமாட்டார்” எனவும் நாமல் ராஜபக்ச கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி அதற்கு உடன்படாது என்று அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசனும் தெரிவித்துள்ளார்.
“ஐக்கிய மக்கள் சக்தி இதற்கு ஒருபோதும் ஆதரவளிக்காது. திட்டமிட்டபடி தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்தால் எந்த கட்சியும் அதற்கு வாக்களிக்காது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தலை இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என பாலித ரங்கே பண்டாரவின் கருத்தை கண்டிப்பதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.