மன்னார் – பேசாலை முருகன் கோவில் காட்டு பகுதியில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அகழ்வு பணி; ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

மன்னார் – பேசாலை முருகன் கோவில் காட்டு பகுதியில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அகழ்வு பணி; ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

மன்னார் – பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முருகன் கோவில் காட்டுப்பகுதியில் இன்று திங்கட்கிழமை (27) காலை அடையாளம் காணப்பட்ட இடத்தில் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய அகழ்வு நடவடிக்கை இடம் பெற்றது.

எனினும், குறித்த அகழ்வு நடவடிக்கைகளின் போது எவ்வித பொருட்களும் மீட்கப்படவில்லை.

பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  முருகன் கோவில் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில்  புதையல் தோண்டியதாக கூறப்படும் நிலையில் கடற்படை அதிகாரி ஒருவர் உள்ளடங்களாக 8 பேர் கடந்த சனிக்கிழமை (18) மாலை கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக பேசாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து ஸ்கேனர் இயந்திரம் உள்ளடங்களாக புதையல் தோண்ட பயன்படுத்திய பொருட்களும் மீட்கப்பட்டிருந்தது.

பேசாலை பொலிஸார் குறித்த 8 பேரையும் விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய நிலையில் குறித்த நபர்களை இன்றைய தினம் திங்கட்கிழமை(27) வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

மேலும், இன்று திங்கட்கிழமை(27) காலை பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  முருகன் கோவில் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில்  புதையல் தோண்டியதாக கூறப்படும் இடத்தில் அகழ்வு பணியை முன்னெடுக்க பேசாலை பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய நீதவான் அனுமதி வழங்கினார்.

இன்றைய தினம் காலை மன்னார் நீதவானின் உத்தரவுக்கு அமைவாக குறித்த பகுதியில் அகழ்வு நடவடிக்கை இடம் பெற்றது.

மன்னார்,பேசாலை பொலிஸார் மற்றும் உரிய திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். எனினும், குறித்த பகுதியில் பெக்கோ இயந்திரம் பயன்படுத்தி அகழ்வு பணிகள் நடைபெற்ற போது எவ்வித பொருட்களும் மீட்கப்படவில்லை.

எனினும், அகழ்வு பணியின் போது புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க ஊடகவியலாளர்களுக்கு பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அனுமதி வழங்கவில்லை.

இதேவேளை, மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய குறித்த 8 சந்தேக நபர்களையும் எதிர் வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This