மன்னாரில் ‘தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம்’ எனும் தொனிப்பொருளில் மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்த மக்கள் மேடை – அரசியல் பிரதிநிதிகள், மக்கள் பங்கேற்பு
தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் பெப்ரல்(PAFFRAL) அமைப்பின் ஏற்பாட்டில், மன்னார் மார்ச் 12 இயக்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த மக்கள் மேடை நிகழ்வு சனிக்கிழமை (25) காலை மன்னாரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது.
மார்ச் 12 இயக்கத்தின் மாவட்ட தலைவர் கொன்ஸால் வாஸ் தயாளராஜன் தலைமையில் இடம்பெற்ற குறித்த மக்கள் மேடை நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ,அரசியல் கட்சிகள்,பொது மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் ஆகிய வற்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதன் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதி நிதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொது மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள்,மத தலைவர்கள்,இளைஞர்,யுவதிகள்,சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து அரசியல் பிரதி நிதிகளின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
மேலும் மாவட்டத்தில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குதல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மண் அகழ்வு குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் காப்பது குறித்து மக்களினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
எனவே மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஓரணியில் செயல்பட்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.