பொது வேட்பாளரின் பின்னணியில் இந்தியா!

பொது வேட்பாளரின் பின்னணியில் இந்தியா!

தமிழ் மக்களை பயன்படுத்தி இதுவரை காலமும் தங்களுடைய பூகோள அரசியல் நலனுக்காக இந்த நாட்டிலே தங்களுக்கு விரும்பிய தலைவர்களை கொண்டு வந்த வல்லரசுகள் இனிமேலும் தமிழர்களை பகடைக்காயாக பயன்படுத்த முடியாது எனவும் இந்தியாவின் பின்னணியில் செயற்படும் தமிழ் சிவில் அமைப்புக்களின் பொது வேட்பாளர் ஒரு நாடகமும் ஒரு சதியுமாகுமெனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மேல்மாடி வீதியிலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலயத்தில் கடந்த புதன்கிழமை மாலை இடம்பெற்று ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறுகையில்,

நாட்டிலே 1949ம் ஆண்டுக்கு பிறகு இருக்கும் ஒற்றையாட்சி கட்டமைப்பை அகற்றிவிட்டு ஒரு சமஸ்டி கட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் தமிழர்கள் இந்த தீவிலே நிம்மதியாக வாழவேண்டும் என்ற சூழ்நிலையை உருவாக்குவது தான் எமது கோரிக்கையாகும். ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள் கடந்த 75 வருடமாக தமிழ் மக்கள் தொடர்ச்சியாக அடக்குமுறைக்கும் அடிமைத்தனத்துக்கும் உள்ளாக்கப்பட்டனர். இந்த அடக்கு முறைக்கு எதிராக தமிழர்கள் போராடிவந்து இன்று ஆயுதப் போராட்டம் பாரிய உயிர்சேதங்களை ஏற்படுத்தி கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்து நிற்கின்ற சூழ்நிலையிலே மீண்டும் அந்த ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை ஆதரிக்கப் போகின்றோமா? அல்லது சமஸ்டிக் கட்டமைப்புக்காக குரல் கொடுக்கப் போகின்றோமா? என்ற விடயத்தில் நாங்கள் தெளிவடைய வேண்டும்.

2012ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்கு இணங்கினர். மக்களுக்கு தமிழ் தேசியத்தை கூறிக்கொண்டு மாறாக 2016ம் ஆண்டு அரசியல் அமைப்பு தயாரிக்கப்பட்டது. அதில் 6 பேர் கொண்ட குழுவில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் இருந்தனர்.

அதில் அவர்கள் ‘ஏக்கிய ராஜ்ய’ என்ற வார்த்தையை பிரயோகித்து மக்களை ஏமாற்றி ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்கு எதிராக போராடிவந்த அந்த நிலையை மாற்றி அவர்களாகவே ஏற்றுக்கொள்ளக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும் விதமாக இவர்கள் ஒரு பச்சை துரோகத்தை செய்கின்ற போது அந்த நேரத்தில் வடக்கு, கிழக்கில் தமிழர்கள் எழுக தமிழர் என்ற மக்கள் எழுச்சியை ஏற்படுத்தி சர்வதேச சமூகத்திற்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் இது தான் என மக்கள் எழுச்சி மூலம்; தெரியப்படுத்தினர்.

அன்றைய நேரத்தில் இந்த சிவில் அமைப்புக்கள் நித்திரை கொண்டதா? அல்லது கோமாவில் இருந்தனரா? என்பது தான் எனது கேள்வி. ஆகவே எங்களை பொறுத்தமட்டிலே ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் எல்லாம் ஒரு நாடகம் ஒரு சதி இதற்கு பின்னணியில் இந்தியா நிற்கின்றது.

இந்தியா விரும்புகின்ற நபர்களையோ, அரசியல் தரப்புக்களையோ காட்டினால் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் அவர்களின் சொல்லை கேட்க மாட்டார்கள் என்பதற்காக சிவில் அமைப்புக்கள் போன்றவற்றை தங்களின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்காக இப்படிப்பட்ட கைங்கரியங்களை இந்தியா செய்கின்றது.

தேர்தல் பகிஷ்கரிப்பு விடயத்தில் மூன்று விடயங்களை சொல்ல இருக்கின்றோம். அதில் முதலாவது ஜனாதிபதியாக வர விரும்புவருக்கு ஒரு செய்தியை சொல்ல இருக்கின்றோம். அவர் ஜனாதிபதியாக வந்தால் தமிழ் மக்கள் ஏனையவர்களுக்கு வாக்களித்திருந்தால் தான் ஜனாதிபதியாக வந்திருக்க முடியாது என்ற விடயத்துக்காகவும் இரண்டாவதாக ஜனாதிபதியாக வராமல் தோற்றவர்கள் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை ஏற்றுக் கொண்டு எழுத்து மூலம் கொடுத்திருந்தால் நாங்கள் ஜனாதிபதியாக வந்திருக்கலாம் என்ற விடயத்துக்காகவும் மூன்றாவதாக இந்த தமிழ் மக்களை பயன்படுத்தி இதுவரை காலமும் தங்களுடைய பூலோக அரசியல் நலனுக்காக இந்த நாட்டிலே தங்களுக்கு விரும்பிய தலைவர்களை கொண்டு வந்த இந்த வல்லரசுகள் இனிமேலும் வந்து தமிழர்களை நாங்கள் பகடைக்காயாக பயன்படுத்த முடியாது. அவர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிய பிறகுதான் தாங்கள் விரும்பிய தலைவர்களை கொண்டுவர இந்த மக்களிடம் கேட்கலாம் என்ற நிலைப்பாட்டை உருவாக்குவதற்காகவுமே இந்த தேர்தல் பகிஸ்கரிப்பை நாங்கள் அறிவித்தோம் எனவும் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This