கல்முனை நகரில் ஒருவழிப் பாதை இருவழிப் பாதையாக திறப்பு
கல்முனை நகரில் உள்ள ஒருவழிப் பாதை இருவழிப் பாதையாக இன்று (23) உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது.
கல்முனை நகர் வர்த்தகர்கள் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, இந்த பாதை திறக்கப்பட்டுள்ளது. இப்பாதையை திறப்பதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீர் தலைமையில் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எச். டி.எம்.எல். புத்திகவின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்த இருவழிப் பாதையை திறந்துவைத்தார்.
இன்று முதல் இந்த ஒருவழிப் பாதை (டமாஸ் ஜுவலரி சந்தியில் இருந்து கொமர்ஷியல் வங்கி வரையான ஒரு வழிப்பாதை) இரு வழியாக மாற்றப்பட்டு பொதுப்போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை பிரதி ஆணையாளர் ஏ.எச்.அசீம், கல்முனை மாநகர பொறியியலாளர் ஜெளஸி அப்துல் ஜப்பார், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் பிரத்தியேக செயலாளர் நௌபர் ஏ.பாவா, பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசகர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.