மனித உரிமைகளை மதிக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை
சம்பூர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி பரிமாறிய நால்வரை இலங்கை பொலிஸார் கைது செய்தமையை வடக்கு – கிழக்கைச் சேர்ந்த பலரும் வன்மையாக கண்டித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கமும் கண்டனம் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் இன்று வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அறிக்கை பின்வருமாறு…
இறுதிக்கட்ட ஈழப்போரின்போது சிறிலங்கா இராணுவத்தினால் பாதிக்கப்பட்டு இனப்படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களை நினைவேந்தி, தமது உறவுகளை அஞ்சலிக்கும் நிகழ்வாக முன்னெடுக்கப்படும் ‘முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை’ நினைவேந்தல்கள் வடக்கு – கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பெங்கும் உணவெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,
சிறிலங்கா காவல்துறை, இராணுவம் உள்ளிட்ட படைத்தரப்புக்களினால் நினைவேந்தல் நிகழ்வுகள் தடுக்கப்பட்டு நினைவு கூரும் உரிமைகள் மறுக்கப்படும் வன்செயல்கள் அரங்கேறி வருகின்றமையை மாணவர் சமூகமாக கூர்ந்து நோக்குகின்றோம்.
அண்மையில் திருகோணமலை சேனையூர்ப் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சியினைப் பரிமாறி போரில் இனப்படுகொலைக்கு உள்ளானவர்களை நினைவு கூர்ந்த மக்கள் சிறிலங்கா காவல்துறையினால் கைது செய்யப்பட்டமை மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சியினை வழங்கிய பொதுமக்கள் சிறிலங்கா காவல்துறையினால் அச்சுறுத்தப்பட்டு, நினைவேந்தல் நிகழ்வுகள் தடுக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியும் உள்ளன.
குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் இருப்பென்பது ஆள்புல மற்றும் குடிசன ரீதியில் ஆக்கிரமிக்கப்பட்டு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், நினைவேந்தலுடன் தொடர்புடைய நிகழ்வுகள் சிறிலங்கா படைத்தரப்புக்களினால் கண்காணிப்புக்கள், அச்சுறுத்தல்களிற்கு உள்ளாக்கப்படுவதோடு, அவற்றினைத் தடுக்கும் செயற்பாடுகளில் தீவிரத் தன்மையுடன் ஈடுபடுகின்றமையினை அண்மைக்காலங்களில் நோக்கக் கூடியதாகவுள்ளது.
அனைத்துலகச் சமூகத்தில் நினைவு கூரல் என்பது மனித உரிமைகளாக மதிக்கப்படும் நிலையில், 2009 ஆண்டு ஈழப்போரில் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளை நினைவேந்தும் வகையில் மே 18 – முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல்களினை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
ஈழப்போர் முடிவிற்கு வந்ததன் பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு முறையான உளவியல் ரீதியாக ஆற்றுப்படுத்தல்களேதும் வழங்கப்படாதவொரு நிலையில் போரின் வடுக்களிலிருந்தும் அதன் கொடூர முகங்களிலிருந்தும் விடுபடுவதற்கான உளவியல் ஆற்றுப்படுத்தலுக்கான மாற்றாக நினைவேந்தல் நிகழ்வுகள் அமைந்திருக்கின்றன.
சிறிலங்காவின் படைத்தரப்புகளினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான நீதி என்பது சாத்தியமற்றுப் போய் சிறிலங்கா நீதிக்கட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்துள்ள நிலையில் அண்மைக்காலங்களில் நினைவேந்தலுடன் தொடர்புடைய நிகழ்வுகளை தடுத்தல் மற்றும் முன்னெடுப்பவர்களை அச்சுறுத்தல்களிற்கு உள்ளாக்கும் சம்பவங்கள் யாவும் தொடர்ந்தும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை உளநெருக்கடிகளிற்கு உள்ளாக்குகின்றன.
நினைவேந்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் பொதுமக்களை ஆங்காங்கே அச்சுறுத்தித் தடுப்பது மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அப்பாவிப் பொதுமக்கள் மீது பிரயோகிப்பதனூடாக நினைவேந்தல் செயற்பாடுகளிலிருந்து தமிழ் மக்களை விலக வைப்பதற்கு சிறிலங்கா அரசு முழுவீச்சில் செயற்பட்டு வருகின்றது.
குறிப்பாக, மக்களின் நினைவுகளினை அழிப்பதற்கு முயல்வதனால் சிறிலங்கா அரசும் அதன் படைத்தரப்புக்களும் தமிழ் மக்கள் தமது உரிமைகளிற்காக கூட்டுச் சேர்வதனையும் தம்மீது தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் செயன்முறைகளிற்கு எதிரான துலங்கல்களை வெளிப்படுத்தவும் முடியாதவொரு நிலையினை ஏற்படுத்த முயற்சிக்கின்றன.
தமிழ் மக்களின் வலிகள் கூரும் நினைவுத் தூபிகளை அழித்தல் மற்றும் தமது போர் வெற்றிச் சின்னங்களை நிறுவுவதன் ஊடாக தமிழ் மக்களின் நினைவுகளை அழிப்பதில் பெரிதாக எதையும் சாதித்திராத ஸ்ரீலங்கா அரசு, முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் செயலென்பது தமிழ் மக்களிடையே முன்னரை விட எழுச்சியோடு முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதனைத் தடுப்பதனூடாக தனது ஆக்கிமிப்பை சாதித்து விட முனைகின்றது.
இதுபோன்ற நினைவு கூரும் உரிமைகளை தடுக்கும் செயற்பாடுகள் பெயரளவிலாவது கூறப்படும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என்பதையும் இங்கே சுட்டிக்காட்டுவதோடு, சிறிலங்கா அரசின் இதுபோன்ற செயல்கள் யாவும் அனைத்துலகச் சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமவாயங்கள், பிரகடனங்களை மீறுவதோடு, ஸ்ரீலங்காவின் நீதிக்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வித உள்ளகப் பொறிமுறைகளும் நம்பகமற்றவை என்பதனை தொடர்ந்தும் நிரூபிக்கின்றன.
நன்றிகள்
ஊடக மற்றும் வெகுசன தொடர்புப் பிரிவு,
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.