தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாகத்துக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாகத்துக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதி இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்சபை கூட்டம் சட்ட ரீதியற்றது என தெரிவித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர்களான சுதாகரன் மற்றும் சூ.சூரியபிரபாவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்றைய தினம் இந்த வழக்கானது வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தபோது இவ்வழக்கின் எதிராளிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நிலையில் வழக்கானது எதிர்வரும் ஜூன் மாதம் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதி ஈரப்பெரியகுளம் பொதுநோக்கு மண்டபத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் சபை கூட்டம் இடம்பெற்றிருந்தது.

இக்கூட்டதிலே பல தீர்மானங்களும் சில பதவி நியமனங்களும் இடம்பெற்றிருந்தன. ஆனால், அவ்வாறு இடம்பெற்ற கூட்டமானது கட்சியின் யாப்பு விதிகளை மீறியதாக காணப்பட்டதாலும் தேர்தல் ஆணைக்குழுவின் விதிகளுக்கு எதிராக காணப்பட்டதாலும் இப்பொதுச்சபை கூட்டம் ஒரு சட்ட ரீதியான கூட்டமல்ல என்பதுடன், அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், தீர்மானங்கள், நியமனங்கள் சட்ட ரீதியற்றவை என்ற ரீதியில் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் கட்சியின் தலைவர், செயலாளர் உட்பட ஏனையவர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இன்று இந்த வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது கட்சி அலுவலகம் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதாகவும், அதனால் அழைப்பாணையை சேர்ப்பிக்க முடியவில்லை எனவும் தெரிவித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கட்சியின் பதிவு செய்யப்பட்ட முகவரியாக இந்த அலுவலகமே காணப்படுவதுடன், கட்சி காரியாலயமும் அந்த முகவரியிலேயே அமைந்திருப்பதாகவும் எங்களுக்கு தெரியவருகிறது. இதனால் பிறிதொரு சேவை மூலமாக அழைப்பாணையினை அவர்களுக்கு அனுப்புவதற்கு நீதிமன்றத்தை கோரியிருந்தோம்.

இதன் காரணமாக எதிர்வரும் ஜூன் மாதம் 19ஆம் திகதிக்கு வழக்கு திகதி இடப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் எதிராளிகள் நீதிமன்றத்தில் தோன்றுவார்கள் என எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்தனர்.

இவ்வழக்கில் சட்டத்தரணிகளாக சட்டத்தரணி இரவீந்திரநாதன் கீர்தனனின் அறிவுறுத்தலுக்கு அமைய சிரேஷ்ட சட்டத்தரணிகளான கனகசபை ரவீந்திரன் மற்றும் துசித் யோன்தாசன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

CATEGORIES
Share This