தமிழர் விரும்பும் தலைவர் ரணிலே; தமிழ்ப் பொது வேட்பாளர் எதற்கு?
“தமிழ் மக்கள் விரும்புகின்ற தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திகழ்கின்றார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிடுகின்ற நிலையில், தமிழ்ப் பொது வேட்பாளர் ஏன் வேண்டும்? இந்த விடயத்தில் வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் ஏன் அதிக கவனம் செலுத்துகின்றார்கள்.?”
- இவ்வாறு கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன.
ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“நடக்கக்கூடிய விடயங்கள் தொடர்பில் வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் கவனம் செலுத்த வேண்டும்.
அதைவிடுத்து மக்கள் விரும்பாத – சாத்தியம் இல்லாத விடயங்கள் தொடர்பில் பேசி காலத்தை வீணடிக்கக்கூடாது. அந்தவகையில், தமிழ்ப் பொது வேட்பாளர் விடயமும் தேவையற்ற ஒன்று.
தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் என்ன தீர்மானம் எடுத்தாலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கே தமிழ் மக்கள் ஆதரவு வழங்குவார்கள்.” – என்றார்.