சீன-இந்திய இராஜதந்திர முறுகல் – மெல்லத் தணிகிறது: காரணம் என்ன?

சீன-இந்திய இராஜதந்திர முறுகல் – மெல்லத் தணிகிறது: காரணம் என்ன?

இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையில் நிலவும் எல்லைப் பிரச்சினைகள் போன்று இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலும் எல்லைப் பிரச்சினைகள் பல ஆண்டுகளாக நிலவுகிறது.

லடாக் எல்லை மோதல் பிரச்சினையால் இருநாட்டு உறவில் சிக்கல் நீடித்து வந்த நிலையில் சுமாா் 18 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவுக்கு புதிய தூதுவரை சீனா அறிவித்துள்ளது.

இருநாட்டு முறுகல்களில் ஓரளவு தளர்வு ஏற்பட்டுள்ளமையே இந்த நியமனத்துக்கு காரணமென இந்தியாவின் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அருணாச்சல பிரதேசம் தெற்கு திபெத்

கடந்த 2022ஆம் ஆண்டு ஒக்ரோபரில் இந்தியாவுக்கான சீன தூதுவர் சன் வெய்ங்டோங்கின் பதவிக் காலம் நிறைவடைந்தது. அதன் பின்னர் இந்தியாவுக்கான தூதுவரை சீனா நியமித்திருக்கவில்லை.

லடாக்கில் எல்லை விவகாரத்தால் கடுமையான கருத்து முரண்பாடுகள் இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் ஏற்பட்டது. அண்மையில் மணிப்பூரில் பிரதமர் மோடி பிரச்சார நடவடிக்கைக்காக சென்ற போது சீனாவின் சில அதிகாரிகள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

அருணாச்சல மாநிலத்தை தெற்கு திபெத் எனக் கூறும் சீனா, அங்கு இந்தியாவின் பிரசன்னத்தை எதிர்ப்பதாகவும் அவ்வப்போது கருத்து வெளியிட்டு வருகிறது.

கடந்த ஆண்டு பிற்பகுதியில் சீனா வெளியிட்டிருந்த புதிய வரை படத்தில் அருணாச்சல பிரதேசம், அக்‌ஷய் சின் பகுதிகள் இடம்பெற்றிருந்தன. அதில் அருணாச்சல பிரதேசத்துக்கு தெற்கு திபெத் என பெயரிட்டும், கடந்த 1962ஆம் ஆண்டு போரில் ஆக்கிரமித்த பகுதியை அக் ஷய் சின் என்றும் சீனா கூறியுள்ளது.

இந்தப் பின்புலத்தில்தான் இந்தியாவுக்கான புதிய சீன தூதுவராக வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி சூ ஃபெய்காங்கை அந்நாட்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங் நியமித்தாா்.

இது தொடா்பாக அதிகாரபூா்வ அறிவிப்பை சீனா வெளியிடவில்லை. எனினும், இந்த நியமனத்தை அந்நாட்டு வெளியுறவு அமைச்சு உறுதி செய்துள்ளது. 60 வயதாகும் சூ ஃபெய்காங், ஆப்கானிஸ்தான், ருமேனியா ஆகிய நாடுகளில் தூதராகப் பணியாற்றியுள்ளாா்.

புதிய உடன்பாடுகள் எட்டப்பட்டன

அவா் விரைவில் டில்லிக்குச் சென்று புதிய பொறுப்பை ஏற்பாா் என்று சீன வெளியுறவு அமைச்சின் வட்டாரங்களை மேற்கொள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2020ஆம் ஆண்டு லடாக் எல்லையில் இருநாட்டு இராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் எழுந்த பிரச்சினைகளே இருநாட்டு இராஜதந்திர உறவிலும் விரிசல்களை ஏற்படுத்தியது.

சீனாவை பகைத்துக்கொள்வது ஆபத்தான போக்கு என்பதுடன், இந்தியாவின் பொருளாதாரத்துக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் இராணுவ எல்லை விவகாரம் தொடர்பில் 21 சுற்று பேச்சு நடைபெற்றுள்ளன.

எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி, ஹாட் ஸ்பிரிங், கோக்ரா ஆகிய பகுதிகளில் இரு தரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள ஒப்புக் கொண்டன. இந்த உடன்பாடுகள் எட்டப்பட்ட நிலையில், இந்தியாவுக்கான புதிய தூதரை சீனா நியமித்துள்ளது.

CATEGORIES
Share This