இரு முக்கிய மாநிலங்களில் நடந்த தேர்தல்: கருத்துக்கணிப்பில் பாஜக பின்னடைவு
இந்தியாவின் ஆளும் கட்சி பாஜக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளிடம் இரண்டு முக்கிய மாநில தேர்தல்களில் தோல்வியை சந்திக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
வட மாநிலமான ஹரியானாவில் நடந்த கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸுக்கு தெளிவான ஆதரவு கிடைத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) ஒரு தசாப்த கால ஆட்சி முடிவுக்கு வந்ததைக் குறிப்பதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இமயமலைப் பகுதியான ஜம்மு காஷ்மீரிலும் எதிர்க்கட்சிகள் முன்னிலை வகிப்பதாக கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளன.
இந்த இரு இடங்களிலும் நேற்று முன்தினம் சனிக்கிழமை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நாளை செவ்வாய்க்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்நிலையில், கருத்துக் கணிப்பு முடிவுகள் சனிக்கிழமை பின்நேரத்தில் வெளியிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் சீரற்ற பதிவைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மோடியின் பாஜக அதிக பெரும்பான்மையைப் பெறும் என்று கருத்துக் கணிப்புகள் கூறியிருந்தன.
ஆனால் அந்த கட்சிக்கு போதிய ஆதரவு கிடைத்திருக்கவில்லை. பெரும்பான்மையைப் பெறுவதற்கும் கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கும் பிராந்தியக் கட்சிகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தேசியத் தேர்தலுக்குப் பின்னர் இந்த இரு இந்தியப் பகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றுள்ளது.
இதேவேளை, இந்தியாவின் தொழில்துறை மையமான மகாராஷ்டிரா மற்றும் கனிம வளங்கள் நிறைந்த கிழக்கு மாநிலமான ஜார்கண்ட் மாநிலங்களில் விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.