மே தினம்; கட்சிகளின் மக்கள் தொகையை வெளியிட்ட நாளிதழ்: சஜித் முன்னணி- சுயாதீன கருத்துக் கணிப்பா என்பது குறித்து கேள்வி
மே மாதம் முதலாம் திகதி தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற அனைத்து அரசியல் கட்சிகளின் பேரணிகளுக்காக கலந்து கொண்ட மக்கள் தொடர்பில் அதிகாரபூர்வ அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளதாக ‘மவ்ரட‘ என்ற சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று புதன்கிழமை வெளியான குறித்த நாளிதழ் இந்த அறிக்கை பற்றி விபரங்களை வெளியிட்டுள்ளது. எனினும், குறித்த அறிக்கை யார் மூலம் எங்கிருந்து வெளியிடப்பட்டது என்பது பற்றிய எந்த விபரமும் செய்தியில் தெரிவிக்கப்படவில்லை.
எவ்வாறாயினும் அந்த அறிக்கையின் பிரகாரம் கோட்டை சத்தம் வீதியில் (Chatham St) எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் நடத்தப்பட்ட ஐக்கிய மக்கள் சக்திப் பேரணியில் சுமார் 45,000 மக்கள் பங்குபற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதையடுத்து, கொள்ளுபிட்டி லிப்டன் சுற்றுவட்டத்தில் இடம்பெற்ற ஜேவிபியின் அரசியல் கூட்டணி என அழைக்கப்படும் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணியில் சுமார் 30,000 மக்கள் கலந்துகொண்டதாக அறிக்கை குறிப்பிடுகின்றது.
மூன்றாவதாக முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்சவின் தலைமையில் பொரல்லையில் இடம்பெற்ற பேரணியில் சுமார் 15,000 மக்கள் பங்குபற்றியுள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் மாளிகாவத்தையில் இடம்பெற்ற பேரணியில் 12,000 பேர் கலந்துக்கொண்டுள்ளதாக அறிக்கை தெரிவிப்பதாக குறித்த சிங்கள நாளிதழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியில் கொழும்பில் இடம்பெற்ற பேரணிக்கு 45,000 பேர் வருகை தந்திருந்ததாக அறிக்கை தெரிவித்திருந்தாலும் அதை விட அதிகளவான மக்கள் தொகை காணப்பட்டதாகவும் அந்த நாளிதழ் கூறுகின்றது.
அதிகளவிலான பேருந்துகள் ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்ட போதிலும் போக்குவரத்து சிக்கல்கள் காரணங்களினால் பேரணி இடம்பெற்ற இடத்துக்கு செல்ல முடியாமல் போனதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும், அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, சுமார் 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை மே தினப் பேரணிகளுக்காக கொழும்பிற்குள் பிரவேசித்துள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.
இதேவேளை இலங்கைத்திவில் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளைப் போன்று சுயாதீனமான கருத்துக் கணிப்புகள் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.