150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது
மக்களவைத் தேர்தலில் 150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
மத்தியப் பிரதேசத்திலுள்ள ரத்லாம் ஜாபுவா மக்களவைத் தொகுதியில் அலிராஜ்பூர் மாவட்டம் ஜோபாத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.
காவிக் கட்சியும் ஆர்எஸ்எஸ்ஸும் இந்திய அரசியல் சாசனத்தையே மாற்ற விரும்புகின்றன. ஆனால், அவற்றைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இந்தத் தேர்தல் நடைபெறுகிறது என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
இட ஒதுக்கீட்டுக்கான உச்ச வரம்பு 50 சதவிகிதம்தான் என்பதை, மக்கள் நலன் கருதி காங்கிரஸ் அரசு அகற்றும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் மக்களின் நிலை பற்றிய உண்மை வெளியே தெரிந்துவிடும். நாட்டின் அரசியல் திசையையே மாற்றியும் விடும் என்றும் தெரிவித்தார் ராகுல்.
அரசியல் சாசனத்தை மாற்றப் போவதாகத் தெளிவாக பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் தெரிவித்துவிட்டார்கள். அதனால்தான் 400 தொகுதிகளைத் தாருங்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். 400-ஐ விடுங்கள், அவர்களால் 150 தொகுதிகளில்கூட வெற்றி பெற முடியாது என்றும் ராகுல் குறிப்பிட்டார்.
மக்களின் உரிமைகளை எல்லாம் பறிக்க நினைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. நாங்கள் அதைத் தடுத்து நிறுத்த நினைக்கிறோம் என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, 22 பெரு வணிக முதலாளிகளைப் பற்றி மட்டும்தான் மோடிஜி கவலைப்படுகிறார், லட்சக்கணக்கான கோடிகளில் அவர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளார் என்றார்.