வெடிகுண்டு மிரட்டலுக்கு மத்தியில் இந்திய மக்களைவைத் தேர்தல்: மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுகள் இன்று
இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் இடம்பெறும் நிலையில் குஜராத் மாநிலத்தில் மூன்றாம் கட்டத் தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை (07) நடைபெறுகின்றது.
மாநிலத்தின் 26 தொகுதிகளில் 25 தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன.வாக்குப்பதிவுகளுக்காக பாடசாலைகளில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
அஹமதாபாத்திலுள்ள 16 பாடசாலைகளுக்கு மின்னஞ்சலினூடாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 11 பாடலைகளில் வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ளன.
எவ்வாறாயினும் வெடிகுண்டு மிரட்டலின் பின்னர் பாடசாலைகளில் தீவிர சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.இதன்போது எதுவித சந்தேகத்திற்கிடமான பொருட்களும் கைப்பற்றப்படவில்லை.
இதனையடுத்து போலி மிரட்டல்கள் என பொலிஸார் உறுதிப்படுத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அண்மையில் டில்லியில் உள்ள பாடசாலைகளுக்கும் இவ்வாறான மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
இந்நிலையில் பொது மக்கள் எதுவித பயமுமின்றி வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பாஜக மிக வலிமையாக உள்ள மாநிலங்களில் குஜராத்துக்கே முதலிடம் என கூறலாம்.
1989 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற 09 மக்களவை தேர்தல்களிலும் பாஜகவே அதிக வாக்குகளைப் பெற்றுக்கொண்டது.
இதேவேளை, எதிர்வரும் 13ஆம் திகதி 96 தொகுதிகளிலும் அதனைத் தொடர்ந்து 20 ஆம் திகதியன்று 49 தொகுதிகளிலும் 25 ஆம் திகதியன்று 57 தொகுதிகளிலும் வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ளன.
அத்துடன் ஜூன் மாதம் முதலாம் திகதியன்று 57 தொகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.