பொதுமக்கள் முன்னிலையில் விவாதத்தை நடத்தவும்; வாக்குகளுக்காக போராடுவோரின் இலக்கு என்ன?
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி எனும் இரு கட்சிகளினிடையே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விவாதம் தற்போது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இலங்கை அரசியல் வரலாற்றில் அதிகளவிலான விவாதங்கள் தொடர்பில் நாம் கேள்விப்பட்டிருப்போம். பார்த்திருப்போம்.
நாடாளுமன்றத்தில் கூட நிதி மற்றும் நேரம் என்பவற்றை செலவழித்து அரங்கேற்றப்படும் விவாதங்கள் பல.
எனினும், அவை அனைத்தும் வெறும் பேச்சுக்களாகவே மாறிவிட்டன.
அதனடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இருவருக்குமிடையே இடம்பெறுவதாக கூறப்பட்டு வரும் விவாதம் தொலைக்காட்சி ஊடகமொன்றில் நடைபெறுவதாயின் அவ்வாறானதொரு விவாதம் அவசியமில்லை என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.
ஏனெனில், விவாதம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுமெனில் விளம்பரங்களுக்கு நேரத்தை ஒதுக்குதல் போன்றவற்றால் விவாத உணர்வு காணாமல் போய்விடுகிறது.
அதனால் பொது மக்களுக்கு அழைப்பு விடுத்து அதன் பின் தொலைபேசிக்கும் திசைக்காட்டிக்குமான விவாதத்தை நடத்துவது சிறந்தது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறானதொரு பின்னணியில்,விவாதங்களுக்கு இது சரியானதொரு நேரம் அல்ல என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விவாதங்களில் ஈடுபடுவதை விட தங்களுடைய அரசியல் கொள்கைகளை வெளிப்படுத்தி பொருளாதார திட்டத்தை பொது மக்கள் முன்னிலையில் கொண்டுவருவதன் மூலம் அதிகாரத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்பது அவர்களின் குறித்த கருத்துக்கு தீர்வாகப் பார்க்கப்படுகின்றது.
பொதுமக்கள் உள்ளாகியிருக்கும் இந்த அவலத்திலிருந்து அவர்களை மீட்டெடுப்பது வாக்குகளுக்காக போராடும் ஒவ்வொருவரினதும் இலக்காக , நோக்கமாக இருக்க வேண்டும்.
விவாதங்களில் ஒவ்வொருவர் மற்றொருவருடைய குப்பைகளை மீளக் கிளறுவதன் மூலம் மறக்க நினைத்துக் கடந்து வந்த சில நினைவுகள் பொது மக்களுக்கு மீள நினைவு கூருவதாக மாறிவிடும்.
ஆகவே, விவாதங்களில் காலத்தை கடத்தாது, உண்மையிலேயே நாட்டுப் பற்றுள்ள அனைத்து கட்சி உறுப்பினர்களும் இணைந்தால் நாட்டை சுவர்க்கமாக மாற்றியமைக்க அவ்வளவு நாட்கள் எடுக்காது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், யார் விரும்பினாலும் இல்லையெனினும் இலங்கை முகம்கொடுத்துள்ள பொருளாதார, அரசியல், சமூக மற்றும் கலாசார நெருக்கடியை தற்போதைய அரசியல் முறைமையை மாற்றியமைப்பதன் மாத்திரமே இதற்கு தீர்வு காண முடியும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.