ரணிலின் உறுதியான வார்த்தைக்காக காத்திருக்கும் கட்சி உறுப்பினர்கள்
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் வேட்பாளர் என உறுதியாக அறிவித்ததன் பின்னர் அவருக்கு ஆதரவு வழங்க அதிகளவிலான ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தயாராகவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, உத்தர லங்கா சபாகய, சுதந்தர மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் அமைச்சர்கள் சிலர் அதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுள் சிலர் அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினப் பேரணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்க தயாராக இருந்தாலும் அவர்கள் கலந்துக்கொண்டிருக்கவில்லை, காரணம் ரணில் தான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் வேட்பாளர் என இன்னும் உறுதிபடுத்தாமையே என குறித்த உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ரணில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் வேட்பாளர் என உறுதியாக அறிவித்ததன் பின்னர் ரணிலுக்கு ஆதரவு வழங்க எதிர்க்கட்சியின் அமைச்சர்கள் சிலர் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி வேட்பாளரை உறுதியாக தெரிவிக்கவில்லை என்பதால் சிலர் தற்போது ஆதரவு தெரிவிக்க தயங்கி வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ தெரிவித்தார்.
ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான அமைச்சர்கள் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் கயாஷான் நவநந்தன அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினப் பேரணியில் ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கலந்துக் கொண்டிருந்தார்.
அதன்படி, எதிர்வரும் காலத்தில் எதிர்க்கட்சியின் ஏனைய சில உறுப்பினர்களும் ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்க இணைவார்கள் என நிமல் ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.