ரணில் வந்துவிட்டாரா? அவர் வந்தால்தான் உரையாற்றுவேன்: பதற்றமடைந்த ஐ.தே.கவின் மே தின மேடை
பல வருடங்களின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரமாண்ட மே தினக் கூட்டம் இம்முறை கொழும்பு மாளிகாவத்தையில் இடம்பெற்றது.
இசை நிகழ்ச்சி, நடனங்கள் மற்றும் பல்வேறு பொழுபோக்கு அம்சங்களுடன் இந்த மே தின மேடை வர்ணமயமாகவும் இருந்தது.
கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு ஆசனத்தைக்கூட ஐ.தே.க வென்றிருக்கவில்லை. இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் அரசியலில் தீர்மானமிக்க சக்தியாக ஐ.தே.க திகழ்ந்தது.
ஆனால், ஓர் ஆசனத்தைக்கூட வெற்றிக்கொள்ள முடியாத ஒரு கட்சியாக ஐ.தே.க மாறியதால் அதன் வரலாறு முடிந்துவிட்டதென விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில் எவரும் எதிர்பாராத வகையில் 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையின் போது தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வந்திருந்த ரணில் விக்ரமசிங்க பிரதமராகி நாடாளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாகவும் தெரிவுசெய்யப்பட்டார்.
அதன் பின்னர் அக்கட்சி மீள கட்டமைக்கப்பட்டு வருகிறது. அதனை வெளிப்படுத்தும் முகமாகவும் இவ்வாண்டு இறுதியில் ஜனாதிபதித் தேர்தலை சந்திக்கும் நோக்கிலும் மே தினக் கூட்டத்தையும் பிரமாண்டமாக நடத்தியது.
இலங்கை முழுவதும் இருந்து ஆதரவாளர்கள் அழைத்துவரப்பட்டதுடன், அவர்களுக்கு சிறந்த கவனிப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
மே தினக் கூட்டத்தில் வரவேற்பு உரையை முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நிகழ்த்தவிருந்தார். நிகழ்ச்சி நிரல் தொடர்பாக அவரிடம் முன்கூட்டியே சம்மதமும் பெற்றப்பட்டுவிட்டது.
மே தினத்தன்று நண்பகல் 12 மணியளவில் “ரவி ஒயா எனவாநேத“ (சிங்களத்தில்) “ரவி நீங்கள் வருவீர்கள் தானே“ என கட்சியின் பொதுச் செயலாளர் பாலி ரங்கே பண்டார தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தியுள்ளார்.
“மம எனவா“ (சிங்கத்தில்) “நான் வருவேன்“ என பதில் அளித்துள்ளார். பிற்பகல் 2 மணியளவில் மீண்டும் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய பாலித்த “மக்கள் வந்துவிட்டனர் எங்கே இருக்கிறீர்கள்” என வினவியுள்ளார். அருகில் வந்துகொண்டிருக்கிறேன். தலைவர் வந்துவிட்டார என ரவி வினவியுள்ளார்.
தலைவர் இன்னும் வரவில்லை வந்துகொண்டிருக்கிறார் என பாலித பதில் அளித்துள்ளார். மீண்டும் சிறிது நேரத்தில் அழைப்பை ஏற்படுத்தி மக்கள் அனைவரும் வந்துவிட்டனர் வரவேற்பு உரையை நிகழ்த்த வேண்டும் என சற்று கோபமாக பாலித்த கூறியுள்ளார்.
தலைவர் வரவில்லை தானே இன்னமும் நீங்களே வரவேற்பு உரையை நிகழ்த்துங்கள் என ரவி கருணாநாயக்க, பாலித்தவுக்கு பதில் அளித்துள்ளார்.
உடனடியாக கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவுக்கு அழைப்பை ஏற்படுத்தி வரவேற்பு உரையை நிகழ்த்த ரவி வருவதாக உறுதியளித்திருந்தார். தற்போது வரமுடியாது எனக் கூறுகிறார் என தெரிவித்துள்ளார்.
ரவி வரவில்லை என்றால் நீங்களே வரவேற்பு உரையை நிகழ்த்துங்கள் என ருவான் பாலித்தவிடம் அறிவுறுத்தினார். அத்துடன், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல
சாகல ரத்னாயக்கவுக்கு அழைப்பை ஏற்படுத்திய ருவான், ரவியின் செயல்பாட்டை விவரித்துள்ளார். சாகல ரத்னாநாயக்க உடனடியாக கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவிடம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அதன் பின்னர் ருவானுக்கு அழைப்பை ஏற்படுத்திய சாகல, நீங்களே வரவேற்பு உரையை நிகழ்த்துங்கள் எனக் கூறியுள்ளார்.
அதன் பிரகாரம் உடனடியாக மேடைக்குவந்த ருவான் விஜேவர்தன, பாலித்தவிடம் தாமே வரவேற்பு உரையை நிகழ்த்துவதாகக் கூறி உரையையும் நிகழ்த்தியுள்ளார்.
வரவேற்பு உரை நிறைவடைந்த பின்னரே ரவி கருணாநாயக்க, மேடைக்கு வந்துள்ளார். பின்னர் ரணில் விக்ரமசிங்க வருகைதர மே தினக் கூட்டம் களைகட்டியது. ஆனால், ரவிக்கு அதிர்ச்சியொன்றும் காத்திருந்தது.
ரவியின் செயல்பாட்டை உடனடியாக சென்று ரணிலிடம் கூறியுள்ளார் பாலித. அதைவிடுங்கள் என ரணில் கூறியதுடன், மனுசவுக்கு பின்னர் தமது உரையை நிகழ்ச்சிப்படுத்துமாறு கூறியுள்ளார்.
மனுசவின் பின்னர் ரவி கருணாநாயக்கவே உரை நிகழ்த்தவிருந்தார். மனுசவுக்கு பின்னர் ரணிலின் உரை இடம்பெற்றதால் ரவி கருணாநாயக்கவுக்கு நிகழ்ச்சியின் இறுதியிலேயே உரையாற்ற சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது.
இதனால் ரவி கருணாநாயக்க கோபமடைந்துள்ளதாக கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.