1700 ரூபா சம்பள உயர்வு; இ.தொ.கா சொல்வதைதான் செய்யும் செய்வதைதான் சொல்லும்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சொல்வதைதான் செய்யும் என்பதுடன், செய்வதைதான் சொல்லும். கடுமையான போராட்டங்களின் ஊடாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளோம் என இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
குறுகிய காலத்தில் இந்த செயல்பாட்டை வெற்றிகரமாக்க ஒத்துழைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தொழில் அமைச்சர் மனுச நாணயக்காரவுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அவர் கூறினார்.
கொட்டகலை பொது மைதானத்தில் இடம்பெற்ற இ.தொ.காவின் பிரமாண்ட மேதினக் கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றி செந்தில் தொண்டமான்,
“இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சொல்வதை மட்டும்தான் செய்யும் என்பதுடன் செய்வதை மட்டும்தான் சொல்லும். இ.தொ.கா.வின் மறைந்த தலைவர்களான சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் எமக்கு கற்பித்ததும் அதுதான்.
காங்கிரஸ் என்ன செய்தது என கேள்வி கேட்கின்றனர். உங்களை கேள்வி கேட்கும் உரிமையை பெற்றுக்கொடுத்ததே காங்கிரஸ்தான் என அவர்களுக்கு கூறுகிறோம்.
இன்று காங்கிரஸ் என்ன செய்தது என கேள்வி கேட்கலாம். காங்கிரஸ் என்ன செய்தது என நீங்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் உங்களது தாத்தா பாட்டியை கேள்வி கேட்பதற்கு சமமானது. உங்களது தந்தையை கேள்வி கேட்பதை போன்றது. இவர்கள் இணைந்து என்ன செய்தார்களோ அதனைதான் காங்கிரஸ் செய்தது.
சம்பளத்தை காங்கிரஸ் வாங்கிக்கொடுக்காது என கூறினர். ஆனால், கடுமையான போராட்டத்தின் ஊடாக நாம் சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளோம்.
இந்த சம்பள உயர்வு பேச்சுவார்த்தைக்கு பல தொழிற்சங்கங்களும் பல சமூக அமைப்புகளும் உதவி செய்தன. இத்தருணத்தில் அவர்களுக்கு இ.தொ.கா சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, தொழில் அமைச்சர் மனுச நாணயக்கார ஆகியோருக்கு இத்தருணத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
குறுகிய காலத்தில் அதாவது கடந்த மூன்று மாதங்களாகதான் இந்த பேச்சுகள் இடம்பெற்றுவந்தன. ஆகவே, இந்த குறுகிய காலத்தில் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள உயர்வை வழங்கியமைக்கான அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தருணத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலைக்கும் நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
மலையக மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்கள் கடந்ததை நினைவுக்கூறும் வகையில் முத்திரையொன்றை இ.தொ.கா முன்னிலையில் இந்திய தலைநகர் புதுடெல்லியில் வெளியிட்டமைக்காக இந்த விசேட நன்றியை இருவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேபோன்று பொருளாதார நெருக்கடியில் எமக்கு உதவிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.” என்றார்.