மட்டு. வாகரை பிரதேசத்தில் இறால் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

வாகரை பிரதேசத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுவரும் இறால் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இல்மனைட் அகழ்வை முற்றாக தடை செய்யுமாறு வலியுறுத்தியும் கிராம மக்கள் மற்றும் சிவில் அமைப்புகளினால் இன்று திங்கட்கிழமை (22) வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இயற்கை வளங்களை அழிக்கும் செயற்திட்டங்கள் தமக்கு வேண்டாம் எனவும் குறித்த திட்டங்களை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் எனவும் பிரதேச செயலகத்தின் நுழைவாயிலை மறித்து பதாதைகளை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது அவ்விடத்திற்கு வருகைதந்த பிரதேச செயலாளர் தாம் புதிதாக எந்த அனுமதியையும் இறால் பண்ணை மற்றும் இல்மனைட் அகழ்வுக்காக வழங்கவில்லை என்றும் இனியும் வழங்கப்போவதில்லை என்றும் உறுதியளித்ததோடு தனது அதிகாரத்தையும் மீறி ஆளுனர் மற்றும் அமைச்சுக்கள் இணைந்த தரப்பின் ஆதரவுடன் குறித்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறியிருந்தார்.

அத்துடன் வாகரை பிரதேசத்தில் இல்மனைட் அகழ முயற்சிக்கும் அல்செமி கெவி மெட்டல் கம்பனியால் தனக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளதையும் மக்கள் மத்தியில் பகிரங்கபடுத்தியிருந்தார்.

இதன் பின்னர் மக்களின் கோரிக்கைகளுக்கு ஆளுனர் மற்றும் ஏனைய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என வலியுறுத்தி பிரதேச செயலகத்தின் முன்பாக மக்கள் தொடர்ந்தும் போராடி வந்தனர்.

இந்த நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாவட்ட செயலாளர் அப்பகுதி மக்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடி முடிவெடுக்க தயாராக இருப்பதாகவும் அதுவரை இப் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க வெள்ளிக்கிழமை வரை இப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளதாகவும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
Share This