ஈரான் ஜனாதிபதியின் இலங்கை பயணம் ஒத்திவைப்பு

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை பயணம் ஒத்திவைப்பு

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு பயணம் செய்யும் திகதி இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்களில் அறிய முடிந்தது.

உமா ஓயா பல்நோக்குத் திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நோக்கில் ஈரான் ஜனாதிபதி எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கைக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார்.

ஆனால், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் பதற்றமான சூழல் காரணமாக இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஈரான் ஜனாதிபதியின் இலங்கை பயணத்தின் திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என கொழும்பில் உள்ள ஈரான் தூதுவரும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 24ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளாவிட்டால் உமா ஓயா திறப்பு தினத்தை ஒத்திவைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

ஈரான் – இஸ்ரேல் இடையிலான பதற்றத்தை தணிக்க ஐ.நாவும் மேற்குலக நாடுகளும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. என்றாலும், இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதலுக்கு பதிலடியை கொடுக்க ஈரான் தயாராகிவிட்டது.

இதற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்ளும் உத்தரவுகளை இப்ராஹிம் ரைசி, அந்நாட்டு இராணுவத் தளபதிக்கு பிறப்பித்துள்ளார். இதனால் வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலை தோன்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

CATEGORIES
Share This