ஆட்சிக்கு வந்தால் ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; ஜே;வி;பி; முன்வைத்த பரிந்துரைகள்: கோட்டாபய ஏமாற்றிவிட்டதாகக் கூறுகிறார் பேராயர்

ஆட்சிக்கு வந்தால் ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; ஜே;வி;பி; முன்வைத்த பரிந்துரைகள்: கோட்டாபய ஏமாற்றிவிட்டதாகக் கூறுகிறார் பேராயர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏமாற்றிவிட்டதாக கொழும்பு பேராயர் மல்கம் கார்தினல் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவிக்கு வரும் முன்னர் கொடுத்த வாக்குறுதிகளை, பதவி வந்தப் பின்னர் காப்பாற்ற தவறியமையால் அவர் தன்னை ஏமாற்றிவிட்டதாக ஆண்டகை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயத்தில் ஒரு தடவை கையை சுட்டுக்கொண்டதாக தெரிவித்த ஆண்டகை, மக்கள் விடுதலை முன்னணியுடனான சந்திப்புக்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

இதேவேளை, எதிர்வரும் 21ஆம் திகதியுடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 5 வருடங்கள் முழுயடையும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுத்தரும் நோக்கில் ஜே.வி.பியின் அரசியல் கூட்டணி எனக் கூறப்படும் தேசிய மக்கள் சக்தி ஏழு பரிந்துரைகள் முன்வைத்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் மூலம் குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் உரிய சட்ட நடவடிக்கைகைள் மேற்கொள்ளப்படும் என கட்சி அறிவித்துள்ளது.

அந்த ஏழு பரிந்துரைகளும் பின்வருமாறு–

  1. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இனங்களுக்கு இடையே வேற்றுமையை உருவாக்கி இனவாத பிரச்சினைகளை உருவாக்கி அதிகளவான உயிர் மற்றும் பொருட் சேதங்களை உருவாக்கி குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டத்தை தீட்டிய பிரதான சூத்திரதாரிகளை சட்டத்துக்கு முன் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  2. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே அறிந்திருந்த போதும் கூட அதனை தடுப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாது அது தொடர்பிலான விசாரணைகளை திசைதிருப்பி பிரதான சூத்திரதாரிகளை காப்பாற்ற முயற்சி செய்த பாதுகாப்பு துறைகளை சேர்ந்த அதிகாரிகள்,ஜனாதிபதி,பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பொறுப்புக் கூற வேண்டிய அனைத்து அரசியல்வாதிகளையும் சட்டத்துக்கு முன் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

03.தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் மூலம் பதவி,தகுதி,தராதிரம் பார்க்காது தண்டனைகள் வழங்கப்படும்.

  1. இது தொடர்பில் தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு உரிய பிரிவுகளிடம் கோரிக்கை விடுக்கப்படும்.
  2. தற்போது வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கும் தாக்குதலுக்கு தொடர்புடைய நபர்களை நாட்டிற்கு அழைத்து வர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  3. இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உயிர் மற்றும் பொருட் சேதங்களுக்கு உரிய நட்டஈடு வழங்கும் முறையை அறிமுகப்படுத்துவதோடு, அவர்களின் மனநிலையை சீர் செய்யும் நோக்கில் உளவியல் வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்துதல்.
  4. தற்போது அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளுடன் சேர்த்து மேலும் விசாரணைகளை மேற்கொள்வதற்கான சிறந்த ஒரு குழுவை அமைத்து மிக குறுகிய காலப்பகுதியில் தாக்குதலுடன் தொடர்புடைய நபர்களை சட்டத்துக்கு முன் நிறுத்தி அவர்களுக்குரிய தண்டனைகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
CATEGORIES
Share This