வெடுக்குநாறிமலை சர்ச்சை; மனித உரிமைகள் ஆணைக்குழு தலையீடு: பொய் சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டதா?
சிவராத்தி தினத்தன்று வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற சர்ச்சை தொடர்பாக வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு (16) விசாரணைகளை முன்னெடுத்தது.
விசாரணைக்கு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், ஆலயத்தின் செயலாளர் மற்றும் பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
விசாரணையின் பின்னர் ஆலய செயலாளர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.
நாங்கள் தொல்லியல் இடங்களை சேதப்படுத்தியதாக தொல்பொருள் திணைக்களத்தினர் சில ஆவணங்களை வழங்கியிருந்தனர்.
குறிப்பாக மலை உச்சியில் தீ மூட்டப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்கள்.
“நாங்கள் அதனை எரித்தமைக்கான எந்த ஆதாரங்களும் சமர்ப்பிக்கபடவில்லை. அத்துடன் அவர்களது கருத்துக்களில் முரன்பாடுகள் காணப்பட்டன.
தீ மூட்டியதாக இவர்கள் புகைப்படம் ஒன்றைக் காட்டினார்கள்.அந்தப் புகைப்படம் முதல்நாள் இரவில் அங்கு காவல் கடமைகளில் இருந்த நெடுங்கேணி பொலிசாரின் செயற்பாடு.
அதற்கான சான்றுகளை நாம் வெளிப்படுத்தியிருந்தோம். அந்த புகைப்படத்தினையே இன்றையதினம் அவர்கள் இங்கு சமர்பித்திருந்தார்கள். இது முற்றிலும் பொய்யானது. இதனை நாம் சுட்டிக்காட்டினோம்” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் நெடுங்கேணி பொலிஸார் மற்றும் வனவளத்திணைக்களத்தினரும் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.