EPAPER
தேர்தல் தொடர்பில் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி பாதிக்கப்படலாம் !

தேர்தல் தொடர்பில் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி பாதிக்கப்படலாம் !

தேர்தல் தொடர்பில் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படலாம் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பான விடயங்களை உள்ளடக்கி தெற்காசிய பொருளாதார மேம்பாடு தொடர்பிலான அறிக்கையொன்றை ஆசிய அபிவிருத்தி வங்கி வௌியிட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தல் மற்றும் அதனுடன் இலங்கையின் நிதிக்கொள்கை, பொருளாதார மறுசீரமைப்பு என்பன உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதற்கான அபாயம் காணப்படுவதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருவதுடன், அந்த வளர்ச்சி 2024, 2025 ஆண்டு காலப்பகுதியில் இடம்பெறுமெனவும் ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்வுகூறியுள்ளது.
இந்த அறிக்கையின் பிரகாரம், கடந்த 2022 ஆம் ஆண்டில் பாரியளவு அதிகரித்த பணவீக்கம், கடந்த வருடமளவில் 10 வீதத்திற்கும் குறைவாகக் காணப்பட்டதுடன், இந்த நிலை 2024, 2025 ஆம் ஆண்டுகளில் தொடரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல்களினால் நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு தேவையான பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தாமதப்படுத்தக்கூடாதெனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் வௌிநாட்டு கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு தாமதமாகின்றமை, இலங்கை பொருளாதார ரீதியாக வளர்ச்சியடையும் வாய்ப்பை எட்டுவதில் உள்ள பாரிய சவால் எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This