படத்தில் வில்லன் நிஜத்தில் ஹீரோ!

படத்தில் வில்லன் நிஜத்தில் ஹீரோ!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தைப் பதித்த டேனியல் பாலாஜியின் இறப்பு, தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.

1975ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த டேனியல் பாலாஜி, தரமணியில் உள்ள திரைப்பட நிறுவனம் ஒன்றில், திரைப்பட தயாரிப்பு தொடர்பான படிப்பினை பயின்றுள்ளார்.

தமிழ் திரைத்துறையுலகில் வில்லன் கதாபாத்திரத்தில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய நடிகர்களில் டேனியல் பாலாஜியும் ஒருவர்.

மருதநாயகத்தில் தொடங்கிய வெள்ளித்திரை பயணம்.

தமிழ் சினிமாவின் முக்கிய வில்லன்களில் ஒருவராக வலம் வந்தாலும் ஆரம்பத்தில் தயாரிப்பு முகாமையாளராக சினிமா துறையில் நுழைந்தார்.
கமல்ஹாசனின் இயக்கத்தில் உருவான “மருதநாயகம்” படத்தில், தயாரிப்பு முகாமையாளராக பணியாற்றினார்.

ஆனால் அந்த திரைப்படம் கைவிடப்பட்டதன் காரணமாக அவருடைய வாழ்க்கைப் பயணம் மாறிப் போனது.

திரைத்துறையில் நடிகராக அறிமுகம் ஆவதற்கு முன்னர் பிரபல தனியார் தொலைக்காட்சியில், நடிகை ராதிகா தயாரித்து நடித்த சித்தி என்ற தொடரில் “டேனியல்” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அந்த கதாபாத்திரத்தில் தனி முத்திரை பதித்ததால் அவரின் பெயர், ‘டேனியல் பாலாஜி’ என மாறியது. அதன்பின் அலைகள் என்ற சீரியலில் நடித்தார் டேனியல் பாலாஜி.

பின்னர் தமிழ்த் திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பதித்தவர்.

தென்னிந்தியத் திரையுலகில் சற்று மாறுபட்ட வில்லனாக வித்தியாசமான முறையில் நடிப்பை வெளிப்படுத்தி இரசிகர்கள் மத்தியில் யாரும் மறக்க முடியாத வில்லன் நடிகராக வலம் வந்தார்.

சின்னத்திரை மூலம் தடம் பதித்த டேனியல் பாலாஜி வெள்ளித்திரைக்குள் பிரவேசித்தார்.

அப்போது, ஸ்ரீகாந்த் நடித்து வெளியான ‘ஏப்ரல் மாதத்தில்’, தனுஷ் நடிப்பில் வெளியான ‘காதல் கொண்டேன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் டேனியல் பாலாஜி நடித்தார்.

ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த டேனியல் பாலாஜி, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த “காக்க காக்க” திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் என்ற முக்கியமான காவல்துறை கதாபாத்திரத்தில் நடித்து இரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றார்.

டேனியல் பாலாஜியின் சினிமாத்துறையில் ‘காக்க காக்க’ திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது என்றும் சொல்லலாம்.

பின்னர் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “வேட்டையாடு விளையாடு” படத்தில் சற்று மாறுபட்ட வில்லனாக நடித்து அனைவரையும் தன்பக்கம் ஈர்த்தார் டேனியல் பாலாஜி.

இதனால் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்திலேயே நடிப்பது என முடிவு செய்த டேனியல் பாலாஜி, விஜய், அஜித் உள்ளிட்ட முக்கிய நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து தனி முத்திரை பதித்தார். தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் போலவே, ‘வடசென்னை’ திரைப்படமும் டேனியல் பாலாஜிக்கு மற்றொரு முக்கிய படமாக திரை பயணத்தில் அமைந்தது.

பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரரான டேனியல் பாலாஜிக்கு கடந்த 29ஆம் திகதி இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக குடும்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.

48 வயதான டேனியல் பாலாஜி, மாரடைப்பினால் உயிரிழந்தது அனைவருக்கும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சினிமா துறையில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை பதித்து வந்த டேனியல் பாலாஜியின் இறப்புச் செய்தி, தமிழ் சினிமாவிற்கே ஒரு பெரும் பேரிழப்பு என திரைத்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பல்வேறு நடிகர்களும், இயக்குநர்களும் டேனியல் பாலாஜி மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

உயிரிழந்த டேனியல் பாலாஜி இறப்பதற்கு முன்பே ‘தனது கண்களை’ தானமாகக் கொடுத்திருந்தார்.

இவர் உயிரிழந்த செய்தி அறிந்ததும், அங்கு விரைந்து வந்த மருத்துவர்கள் அவரின் கண்களை தானமாக பெற்றுச் சென்றனர்.

சினிமாவில் வில்லனாக வலம் வந்த டேனியல் பாலாஜி நிஜத்தில் தன்னுடைய கண்களை வழங்கி ஹீரோவாக மாறியுள்ளார் என அவரது இரசிகர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This