பாங்க் ஆஃப் இந்தியாவிடம் 80 லட்சம் டொலர் ஒப்படைக்க வேண்டும்: நீரவ் மோடிக்கு பிரித்தானிய உயர் நீதிமன்றம் உத்தரவு
வைர வியாபாரி நீரவ் மோடி, பாங்க் ஆஃப் இந்தியா வங்கியிடம் 80 லட்சம் டொலர் ஒப்படைக்கும்படி லண்டன் உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாங்கிய ரூ.13,500 கோடி கடனை வைர வியாபாரி நீரவ் மோடி திருப்பிச் செலுத்தாமல் 2018-ல் லண்டன் தப்பிச் சென்றார். இதையடுத்து, அவர் மீது சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தன. லண்டனில் நடைபெற்ற நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாக நீரவ் மோடி சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். தற்போது அவர் லண்டனில் உள்ள தேம்ஸைட் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
முன்னதாக, துபாயில் உள்ள தனக்கு சொந்தமான ஃபயர் ஸ்டார் வைர டைமண்ட் நிறுவனத்துக்காக பாங்க் ஆஃப் இந்தியா வங்கியிடம் 90 லட்சம் டாலர் கடனாக நீரவ் மோடி பெற்றிருந்தார். அதனையும் 2018-ஆம் ஆண்டில் செலுத்துவதாக அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றாமல் வங்கியை ஏமாற்றிவிட்டார்.
இந்நிலையில், லண்டன் உயர் நீதிமன்றத்தில் பாங்க் ஆஃப் இந்தியா மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், நீரவ் மோடிக்கு சொந்தமான ஃபயர் ஸ்டார் வைர டைமண்ட் துபாய் நிறுவனத்தின் மூலமாக தங்களுக்கு சேர வேண்டிய 80 லட்சம் டொலர்களை மீட்டுத்தரும்படி கோரிக்கை வைத்தது.
இந்த மனுவை விசாரித்த லண்டன் உயர் நீதிமன்றம் நீரவ் மோடிக்கு சொந்தமான எந்தவொரு நிறுவனத்தையும் ஏலம்விட்டு அல்லது விற்று தங்களுக்குச் சேர வேண்டிய தொகையை பாங்க் ஆஃப் இந்தியா வங்கி மீட்டுக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளது.