மகாசிவராத்திரி விரதத்தை எப்போது துவங்கி, எந்த நேரத்தில் நிறைவு செய்ய வேண்டும்? 

மகாசிவராத்திரி விரதத்தை எப்போது துவங்கி, எந்த நேரத்தில் நிறைவு செய்ய வேண்டும்? 

சிவ பெருமானுக்கு நடைபெறும் நான்கு கால பூஜைகளில் முதல் காலம் பிரம்ம தேவர் வழிபட்ட காலமாகவும், 2ம் காலம் மகாவிஷ்ணு வழிபட்ட காலமாகவும், 3ம் காலம் அம்பிகை வழிபட்ட காலமாகவும், 4ம் காலம் தேவர்கள், ரிஷிகள் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளும் வழிபட்டு சிவனின் பேரருளை பெறுவதற்கான காலமாகவும் சொல்லப்படுகிறது. மகாசிவராத்திரி அன்று சிவ வழிபாடு செய்த அவரது மனதை குளிர செய்தால் வேண்டிய வரங்களை பெற முடியும் என்பது நம்பிக்கை.

மகாசிவராத்திரி என்பது சிவ பெருமானுக்கு மிகவும் உகந்த விரத நாளாகும். சிவனின் அருளை முழுவதுமாக பெற நினைப்பவர்கள் மகா சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவனை வழிபடலாம். இந்த நாளில் விரதம் இருந்து சிவனை வழிபடுபவர்களின் பாவங்கள் அனைத்து நீங்கும். உடலில் உள்ள நோய்கள் மட்டுமல்ல, பிறவிப் பிணி என்னும் நோயும் நீங்கி, மறுபிறவி இல்லாத முக்தி நிலையை சிவபெருமான் தந்தருள்வார். மிக உன்னதமான மகா சிவராத்திரி நாளில் எப்படி விரதம் இருக்க வேண்டும், எந்த நேரத்தில் விரதத்தை துவக்கி, எந்த நேரத்தில் நிறைவு செய்ய வேண்டும், எந்த நேரத்தில் பூஜை செய்து சிவனை வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

​இந்த ஆண்டு மகா சிவராத்திரி திருநாள் மார்ச் 08ம் திகதி வெள்ளிக்கிழமை (இன்று) வருகிறது. அன்று சுக்கிர வார பிரதோஷமும் சேர்ந்தே வருகிறது. அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து நீராடி, நாள் முழுவதும் உபவாசமாக இருக்க முடிந்தவர்கள் இருக்கலாம். முடியாதவர்கள், வயதானவர்கள் எளிமையாக பால், பழம், இளநீர், பழச்சாறு சாப்பிட்டு விரதம் இருக்கலாம். குழந்தைகளாக இருந்தால் ஒருவேளை மட்டும் சாப்பிட்டோ அல்லது ஒருவேளை மட்டும் சாப்பிடாமலோ விரதம் இருக்கலாம். மகா சிவராத்திரி நாளில் பலரும் குலதெய்வம் கோவிலுக்கு செல்லும் வழக்கம் உள்ளது. அப்படி கோவிலுக்கு செல்வதற்கு முன் வீட்டில் சிவலிங்கம், சிவன் படம் ஏதாவது வைத்திருந்தால் அதற்கு அபிஷேகம் செய்து, ஒரே ஒரு வில்வ இலையையாவது படைத்து வழிபட்டு விட்டு கோவிலுக்கு செல்லலாம்.

​​மகா சிவராத்திரி அன்று நான்கு கால பூஜைகள் நடைபெறும். கோவிலுக்கு சென்று இந்த பூஜைகளில் கலந்து கொள்ளலாம். அப்படி கலந்து கொள்ள முடியாதவர்கள் அபிஷேகத்திற்கு தேவையான பால், பன்னீர், இளநீர், தயிர், தேன், சந்தனம், திருநீறு என ஏதாவது ஒரு பொருளை வாங்கிக் கொடுக்கலாம். வீட்டில் பூஜை செய்பவர்கள் வீட்டில் உள்ள லிங்கத்திற்கு உங்களால் முடிந்த பொருட்களால் அபிஷேகம் செய்து, நான்கு காலங்களும் ஏதாவது நைவேத்தியம் வைத்து வழிபடலாம். முடியாதவர்கள் பழங்களை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். இரவு முழுவதும் கண் விழிப்பதற்கு திருவாசகம், சிவபுராணம் ஆகியவற்றை படிக்கலாம். கோவிலுக்கு சென்று வழிபடுபவர்கள் அங்கு தரும் பிரசாதங்களை வாங்கி சாப்பிடலாம்.

மார்ச் 09ம் திகதி காலை 6 மணிக்கு முன்பாக நான்காம் கால பூஜையை நிறைவு செய்து பிரசாதம் கொடுப்பார்கள். இதை வாங்கி சாப்பிட்டு பட்டினி விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். வீட்டில் விரதம் இருப்பவர்களும், காலை 6 மணிக்கு உணவு சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். அதற்கு பிறகு உடனடியாக தூங்க சென்று விடக் கூடாது. மார்ச் 09ம் திகதி பகல் முழுவதும் கண் விழித்து, மாலையில் விளக்கேற்றி வழிபட்டு, இரவில் எளிமையான உணவு எடுத்துக் கொண்ட பிறகு வழக்கம் போல் தூங்கச் செல்லலாம். சாப்பிடாமல் இருக்கும் விரதத்தை மட்டுமே மார்ச் 09ம் தேதி காலை நிறைவு செய்ய வேண்டும். தூங்காமல் இருக்கும் மகா சிவராத்திரி விரதத்தை மார்ச் 09ம் தேதி இரவு 7 மணிக்கு பிறகு தான் நிறைவு செய்ய வேண்டும்.

மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள். மூன்றாம் கால பூஜையின் போது மட்டுமாவது கண் விழித்து சிவ வழிபாடு செய்ய வேண்டும். அல்லது முன்பே தூங்கி விட்டு, மூன்றாம் கால பூஜையின் போது எழுந்து, வழிபாடு செய்யலாம். இரவு 11.45 மணி முதல் 12.15 அல்லது 12.30 வரையிலான நேரத்தில் நடக்கும் மூன்றாம் கால பூஜையின் போது கண்டிப்பாக தூங்காமல் அனைவரும் சிவ வழிபாடு செய்ய வேண்டும். இது அம்பிகை, சிவனை வழிபட்ட காலமாகும். இதற்கு லிங்கோத்பவ காலம் என்று பெயர். சிவ பெருமான், ஆதியும் அந்தமும் இல்லாத ஜோதி வடிவாக, லிங்கோத்பவராக காட்சி கொடுத்த நேரம் என்பதால் இந்த நேரத்தில் சிவ வழிபாடு செய்வது கேட்ட வரங்களை பெற்றுத் தரக் கூடிய மிக சக்தி வாய்ந்த நேரமாகும்.

வீட்டில் ருத்ராட்சம், சாளகிராமம் போன்றவை இருந்தால் அவற்றிற்கு அபிஷேகம் செய்து, கையில் வைத்து சிவாய நமஹ என்ற மந்திரத்தை சொல்லி அவற்றின் சக்திகளை புதுபிக்கலாம். முதல் முறையாக ருத்ராட்சம் அணிய போகிறீர்கள் என்றால் சிவ பெருமானின் படத்திற்கு முன் வைத்து, இந்த மூன்றாம் கால பூஜையின் போது சிவனை வழிபட்டு, ருத்ராட்சத்தை அணிந்து கொள்ளலாம். ஏற்கனவே கழுத்தில் ருத்ராட்சம் அணிந்திருந்தால் அதை கழற்றி, நன்கு சுத்தம் செய்து விட்டு சுவாமி படத்திற்கு முன் வைத்து, பூஜை செய்து, மந்திர ஜபம் செய்து, பிறகு கழுத்தில் அணிந்து கொள்ளலாம். சிவன் மற்றும் அம்பிகையின் சக்தி பல மடங்கு அதிகரித்து பிரபஞ்சம் முழுவதும் பரவி இருக்கக் கூடிய நேரம் என்பதால் அந்த நேரத்தில் சிவ வழிபாடு செய்வது மிக உயர்ந்த பலனை பெற்றுத் தரும்.

CATEGORIES
TAGS
Share This