ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க தயாராகும் தமிழர் தாயகம்- பாகம் -1

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க தயாராகும் தமிழர் தாயகம்- பாகம் -1

அன்பான மக்களே.
இலங்கையில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என சமூக சிந்தனை உள்ள பலரும் ஏகமனதாக தீர்மானித்துள்ளார்கள். இச்சூழ்நிலை காண காரணமாக முன்னிலைப்படுத்தப்பட்டது

  1. தமிழர் பிரதேசங்களில் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் முதல் குருந்தூர் மலை வழிபாட்டு பிரச்சனை வரை தமிழர் தாயகத்தில் முடிவின்றி நீண்டு செல்லும் நாளாந்த அடக்குமுறைகளும் அதன் தொடர்ச்சிகளும்.
  2. 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் இன்றுவரை தமிழர்களின் அடிப்படை பிரச்சனைக்கான இறுதித் தீர்வை தர விரும்பாத இலங்கை அரசின் நிலைப்பாடு.
    தமிழர் நலன்களில் எவ்வித கரிசனையும் இல்லாத சிங்கள தேசத்தின் ஜனாதிபதி தேர்தல் ஆனது சிங்கள மக்களுக்கு உரியது இதனை தமிழ் மக்கள் புறக்கணிப்பது காலத்தின் கட்டாயமாகும். இதனூடாக சிங்கள அரசிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் எமது உறுதியான நிலைப்பாட்டை தெரியப்படுத்துவோம்.

!!பொது வேட்பாளரை நியமிப்பது சிறந்த முடிவா!!?

2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் தாயகத்தில் ஒரு கூட்டமைப்பாக இருந்த தமிழ் தரப்பு அரசியல் கட்சிகளின் இன்றைய நிலையை தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கடந்த 14 வருடங்களாக தமிழர் தாயகப் பகுதியில் தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ் மக்களுக்கான செயல்திட்டங்களாக ஆக்கபூர்வமாக செய்த விடயங்கள் என்ன? என்பதை பட்டியலிட்டு பாருங்கள்.

மக்களின் அடிப்படை வாழ்வாதார முன்னேற்றத்தில் இருந்து அடிப்படை இனப் பிரச்சனை வரை தமிழ் கட்சிகள் இன்று வரை சாதித்தது என்ன?

கட்சிக்கான தலைமை பொறுப்பை யார் ஏற்பது? என்ற முடிவிற்காக நீதிமன்றம் வரை சென்றுள்ள இந்த அரசியல் தலைமைகளை இனியும் நம்ப போகின்றீர்களா?

இவர்களது குப்பைத்தொட்டி அரசியலுக்குள் இனியும் தமிழர்கள் இணைந்து பயணிப்பதா?

மக்களின் நலனில் அக்கறை உள்ள புதியவர்களின் வருகை இன்று வரை அரசியல்வாதிகளால் ஏற்றுக்கொள்ளப்படுமா?

தங்கள் சுயநலங்களுக்காகவும் பதவிகளுக்காகவும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் இவர்களை நம்பி நாங்கள் ஒரு பொது வேட்பாளர் என ஒருவரை தெரிவு செய்தல் தமிழினத்திற்கு நன்மையா?

இவ்வாறான கேள்விகளுக்கு நாங்கள் எங்களுக்குள் விடை காண வேண்டும்.
அதன் பின்னர் ஒற்றுமையாக தமிழ் வேட்பாளர் ஒருவருக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதாக இருந்தால், அந்த தமிழ் வேட்பாளர் பின்வரும் வாக்குறுதிகளை தமிழ் மக்களுக்கு வழங்க தயாரா?

நான் ஜனாதிபதி
ஆனால்

6 ஆம் திருத்தச் சட்டத்தை நீக்குவேன்.

தமிழ் இன அழிப்பை முனைய அரசுகள் செய்தன என்பதனை ஏற்று சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு கொண்டுசெல்வேன்.

இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக தமிழர்கள் மத்தியில் சர்வதேச மேற்பார்வையுடன் கூடிய வாக்கெடுப்பை நிகழ்த்துவேன்.

மேற்கு கூறப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவேன் என ஒரு பொது வேட்பாளர் தமிழ் மக்களுக்கு தனது சத்தியவாக்கை தெரிவித்தால் தமிழர்கள் ஒன்றிணைந்து வாக்களிப்பது தொடர்பாக சிந்திப்பார்கள்.

இதனைக் கடந்த எந்த ஒரு நிலைப்பாட்டிலும் ஒரு பொது வேட்பாளரை நியமித்து வாக்களிக்க தமிழர்கள் தயாராக இல்லை. இதனை ஒன்று இணைந்து வெளிப்படுத்த தாயக மக்கள் தயாராகி வருகின்றனர்.
தொடரும்…

ச. வித்தகன்

CATEGORIES
Share This