சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரை – காராசாரமான விவாதம் ; முடிவுகள் இன்றி கூட்டம் ஒத்திவைப்பு!

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரை – காராசாரமான விவாதம் ; முடிவுகள் இன்றி கூட்டம் ஒத்திவைப்பு!

தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரைக்கு காணியைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையில் இராணுவம் களமிறங்கியுள்ள நிலையில் குறித்த விடயத்துக்கு நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தையிட்டி விகாரையுள்ள 8.04 ஏக்கர் காணியை சட்டப்படி வழங்குமாறு நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவுக்கு இராணுவம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

சர்ச்சைக்குரிய விகாரை அமைந்துள்ள பகுதியில் 21 ஆயிரம் சிங்களக் குடும்பங்கள் வசித்ததாகவும் தமிழ் மக்கள் தங்களுடைய காணி என்று உரிமை கோருவதை ஏற்க முடியாது. சிங்களவர்கள் வாழ்ந்த காணியில் தான் விகாரை அமைக்கப்பட்டுள்ளது என்று கூறும் இராணுவம், தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு சட்டப்படி காணி அனுமதியைக் கோரியுள்ளது.

தையிட்டி விகாரை தொடர்பில் நேற்றைய தினம் (05) தேசிய பாதுகாப்பு மேற்பார்வைக்குழுவில் ஆராயப்பட்டபோது கடும் எதிர்ப்பு காட்டப்பட்டநிலையில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

இரண்டு மணி நேரம் வரை நடைபெற்ற இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, சமல் ராஜபக்ச , தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன், காணி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண காணி ஆணையாளர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர், நில அளவை நாயகம், பௌத்த பிக்குகள், சட்டத்தரணிகள், இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது தையிட்டி விகாரை அமைந்துள்ள பிரதேசமான 8 ஏக்கர் நிலமும் விகாரைக்குரிய பிரதேசம், அங்கே 1960 ஆம் ஆண்டு முதல் வாழ்ந்த 406 சிங்கள மக்களுக்கு அது சொந்தமானது, இருந்தபோதும் சில தமிழ் மக்களும் உரிமை கோரு கின்றனர், விகாரை உள்ள 8 ஏக்கர் நிலத்தையும் சிங்கள மக்களோ அல்லது தமிழ் மக்களோ உரிமை கோர முடியாது, அது முழுமையாக விகாரைக்குரியது, அங்கே நிலம் இழக்கப்பட்டதாக எவராவது நிரூபணம் செய்தால் அதற்கு மாற்றுக் காணி வழங்கலாம் என பௌத்த சாசன அமைச்சு சார்பில் கலந்துகொண்டவர்களால் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது கருத்துரைத்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன், தையிட்டியில் விகாரை அமைத்துள்ள விகாரையின் பௌத்த பிக்கு 2017 ஆம் ஆண்டு தெல்லிப்பழை பிரதேச செயலாளருக்கு எழுத்தில் விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பத்தில் தனது 20 பரப்பு நிலத்தை அடையாளம் காட்டுமாறு கோரியிருந்தார்.

அதாவது 1956ஆம் ஆண்டு விகாரையின் பெயரில் ஒருவர் அனபளிப்பாக வழங்கிய உறுதி பௌத்த பிக்குவிடம் உள்ளது. அது அவர்களிற்கு உரித்தான நிலம் என நாமும் ஏற்றுக்கொள்கின்றோம்.

இதே நேரம் 2022 ஆம் ஆண்டு அப் பகுதி இராணுவ அதிகாரி விகாரை அமைந்துள்ள 8 ஏக்கர் நிலத்தையும் விகாரையின் பெயரில் ஆவணத்தை கோரி மீண்டும் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திறகு விண்ணப்பித்துள்ளார். அவ்வாறானால் இதற்கான அளவீடு யாரால், யாரினுடைய அனுமதியில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது

தையிட்டியில் விகாரைக்குரிய 1.45 ஏக்கர் நிலம் மட்டுமே. 1956 ஆம் ஆண்டு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நிலம் மட்டுமே விகாரைக்குரியது. இருந்தபோதும் அங்கே எந்தக் காலத்திலும் விகாரை இருந்த ஆவணங்களும் கிடையாது. இவை தவிர 13 தமிழ் குடும்பங்களிற்கு உரித்தான 6.54 ஏக்கர் நிலத்தையும் அபகரித்தே தற்போது 8 ஏக்கரில் விகாரை உள்ளது. அந்த 6.54 ஏக்கர் நிலத்தை நீங்கள் எவ்வாறு சுவீகரிக்க முடியும் அது முழுமையான சட்ட மீறல் .அந்த 6.54 ஏக்கர் நிலமும் நில உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டே ஆக வேண்டும். – என்றார்.

இதன்போது குறுக்கிட்ட இராணுவ அதிகாரி, அந்த நிலம் இராணுவ நில அளவையாளர்களால் அளவீடு செய்யப்பட்டு வரைபடம் வழங்கப்பட்டது எனப் பதிலளித்தபோது பெரும் சர்ச்சை ஏறபட்டது.

மக்களிற்குச் சொந்தமான நிலத்தை இராணுவம் மூலம் அடாத்தாகப் பிடித்து வைத்துக்கொண்டு, அந்த நிலத்தை இராணுவமே அளவீடு செய்து, சுவீகரித்துத் தருமாறு கோருவது எந்தச் சட்ட ஏற்பாட்டில் உள்ளது மக்களின் நிலத்தை அளவீடு செய்ய இராணுவத்திற்கு உரிமை கிடையாது. இவர்கள் யார் அதனை அளப்பதற்கு – என நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் வேள்விகளை எழுப்பினார்.

அவ்வாறானால் அதனை நில அளவைத் திணைக்களம் அளவீடு செய்து சமர்ப்பியுங்கள் என சரத் வீரசேகர கோரிக்கை விடுத்தார்.

மக்களின் நிலத்தை அவர்களின் சம்மதம் அல்லது பகிரங்க அறிவித்தல் இன்றி அளவீடு செய்ய முடியாது என நில அளவைத் திணைக்கள நாயகத்தால் பதிலளிக்கப்பட்டது. இவற்றை ஆராய்ந்த குழு எழுத்தில் பதிலளிப்பதாக தெரிவித்து முடிவுகள் இன்றி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This