சட்டத்திற்கு மாறாக சம்பளம் அதிகரிப்பு!
இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கு சட்டத்திற்கு முரணாக 70 சதவீதத்தினால் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளமை அரசாங்க நிதி பற்றிய குழுவில் நேற்று தெரியவந்துள்ளது.
மத்திய வங்கியின் நிதிச் சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்றைய தினம் குறித்த குழுவில் முன்னிலையாகியிருந்த போது இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
முன்னதாக நாடாளுமன்றில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட மத்திய வங்கி ஆளுநர் மற்றும் ஏனைய உயர் மட்ட அதிகாரிகளுக்கு கடும் அதிருப்தி வெளியிடப்பட்டிருந்தது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமக்கு அறிவிக்காமல் மேற்கொள்ளப்பட்ட இந்த வேதன அதிகரிப்பு பாரதூரமான விடயம் என நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வைத்து தெரிவித்திருந்தார்.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து நிதியமைச்சு, அரச ஊழியர்களின் செலவுகளை மட்டுப்படுத்த சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் மத்திய வங்கி ஊழியர்களின் வேதனம் பாரிய அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சில அதிகாரிகளின் வேதனம் சுமார் 70 சதவீதத்தினால் உயர்த்தப்பட்டமையை பல தரப்பினரும் விமர்சித்துள்ளனர்.
எனினும் மத்திய வங்கி ஊழியர்களின் 70 சதவீத வேதன அதிகரிப்பு தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி இந்த வேதன அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவையில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் மத்திய வங்கி ஆளுநர் மற்றும் அதன் உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மத்திய வங்கி அதிகாரிகளின் வேதன அதிகரிப்பு தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்த வேதன அதிகரிப்பு காரணமாக மாதாந்தம் 232 மில்லியன் ரூபாய் மேலதிகமாக செலவிடப்படவுள்ளமை தெரியவந்துள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பின்னர் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட அரசாங்க நிதி பற்றியக் குழு கூடியது.
இதில் மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதிச் சபை உறுப்பினர்களும், சட்டமா அதிபர் திணைக்களம், கணக்காய்வாளர் திணைக்களம் என்பவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
மத்திய வங்கி ஒரு சுயாதீன நிறுவனமாக இருப்பதால், அவர்களின் வேதனத்தை அதிகரிப்பதில் அல்லது வேறு நடவடிக்கைகளில் நாடாளுமன்றம், நிதி அமைச்சு அல்லது அரசாங்கம் தலையிட முடியாது என மத்திய வங்கி அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும், தற்போதுள்ள சட்டத்திற்கு மாறாக இந்த வேதன அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.