சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் ; தேரர் கைது!

சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் ; தேரர் கைது!

இரண்டு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தேரர் ஒருவர் ஹோமாகம தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மந்திரங்கள் மூலம் நோய்களைக் குணப்படுத்துவதாக கூறப்படும் தேரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் 13 வயதுடைய இரட்டை சிறுவர்களாவார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த இரு சிறுவர்களில் ஒருவர் சுகயீனமடைந்துள்ள நிலையில் அவர்களது பெற்றோர் அந்த சிறுவனை வைத்தியத்துக்காக குறித்த தேரரிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.

சுகயீனமடைந்துள்ள சிறுவனை குணப்படுத்த விசேட பூஜைகள் நடத்த வேண்டும் என கூறிய தேரர் சிறுவனை தன்னுடன் தங்க வைத்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் இரட்டை சிறுவர்களில் மற்றைய சிறுவனும் சுகயீனமடைந்துள்ள நிலையில் குறித்த தேரர் சிறுவனின் வீட்டுக்குச் சென்று அந்த சிறுவனையும் தன்னுடன் காரில் அழைத்துச் சென்றுள்ளார்.

இதன்போது இந்த தேரர் இந்த இரட்டை சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபர் ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இருவரும் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This