குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரி நாட்டை விட்டு வெளியேற்றம்!
பாதாள உலகக் குழு உறுப்பினர்களின் தொடர்ச்சியான அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் கீழ் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி துமிந்த ஜயதிலக்க, நாட்டை விட்டு வெளியேறி பிரான்ஸிற்கு சென்றுள்ளார்.
ஆட்டுப்பட்டி தெரு காவல்நிலையத்தில் சந்தேகநபர்கள் இருவருக்கு விஷம் கலந்த பால் வழங்கப்பட்ட சம்பவம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து ஹரக் கட்டாவை அழைத்துச் செல்ல திட்டமிட்ட சம்பவம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அவர் பொறுப்பேற்றிருந்தார்.
அத்துடன் கடந்த சில நாட்களாக பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கும் அவர் நடவடிக்கை எடுத்திருந்தார்.
எவ்வாறாயினும், குறித்த சோதனை நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் கைது உள்ளிட்ட விடயங்கள் காரணமாக, பாதாள உலகக் குழு உறுப்பினர்களிடம் இருந்து அவருக்கு தொடர்ச்சியாக தொலைபேசி ஊடாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தி சேவை அண்மையில் வெளிப்படுத்தியிருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ள போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிபானி இம்ரானிடம் இருந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் கீழ் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி துமிந்த ஜயதிலக்கவுக்கு விசேட பாதுகாப்புகள் வழங்கப்பட்டதுடன் தனிப்பட்ட துப்பாக்கியும் வழங்கப்பட்டது.
எனினும், தமது 7 வயது மகள் மற்றும் மனைவியை ரகசிய இடமொன்றில் தங்க வைத்துவிட்டு அவர் பிரான்ஸ் நோக்கி சென்றுள்ளார்.
தமது மகள் மற்றும் குடும்ப நலன் கருதி இவ்வாறு செயற்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் கீழ் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி துமிந்த ஜயதிலக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.