போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு!

போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு!

மத்திய அரசின் பரிந்துரைகளை நிராகரிக்கிறோம். இன்று முதல் டெல்லி நோக்கி முன்னேறி செல்வோம் என்று விவசாய சங்க தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளின்படி 23 வகையான பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும். இதை உறுதி செய்து சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13ஆம் திகதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

250 விவசாய சங்கங்கள்: பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 250 விவசாய சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்று உள்ளன. ஆயிரக்கணக்கான விவசாயிகள் பஞ்சாபில் இருந்து தலைநகர் டெல்லியை நோக்கி பேரணியாக செல்கின்றனர். அவர்கள் பஞ்சாப்- ஹரியாணா எல்லைப் பகுதியான ஷம்புவில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

மத்திய அரசு சார்பில் விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் கடந்த 18ஆம் திகதி 4 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறும்போது, “விவசாயிகளின் கோரிக்கை அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. மத்தியில் புதிய அரசு அமைந்த பிறகு விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். இப்போதைக்கு பருத்தி, சோளம், துவரை, உளுந்து, மசூர் பருப்பு ஆகியவற்றை 5 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்ய உறுதி அளிக்கிறோம்” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து கிஷான் மஸ்தூர் மோர்ச்சா சங்கத்தின் தலைவர் ஷிரவன் சிங் பாந்தர், பாரதியகிஷான் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் தலேவால் நேற்று முன்தினம் இரவு கூறும்போது, “குறிப்பிட்ட 5 பயிர்களுக்கு மட்டும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்து அதன் அடிப்படையில் கொள்முதல் செய்ய மத்திய அரசு சில பரிந்துரைகளை முன்வைத்தது. இதை நிராகரிக்கிறோம். புதன்கிழமைமுதல் டெல்லி நோக்கி முன்னேறி செல்வோம்” என்றனர்.

விவசாயிகளை தடுக்க பஞ்சாப்-ஹரியாணா எல்லை பகுதிகளில் 8 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

உயர் நீதிமன்றம் கண்டிப்பு: விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) சந்த்வாலியா, நீதிபதி லபிதா பானர்ஜி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது தலைமை நீதிபதி சந்த்வாலியா கூறும்போது, “போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு உரிமை உள்ளது. ஆனால் டிராக்டர், டிராலிகள் மூலம் சாலையை ஆக்கிரமிக்கக்கூடாது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பஞ்சாப் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

CATEGORIES
TAGS
Share This