சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!
‘கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பைத் தடுக்கும் வகையில் 9 முதல் 14 வயது வரையுடைய சிறுமிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை மத்திய அரசு ஊக்குவிக்கும்’ என்று பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடைக்கால பட்ஜெட் உரையின்போது மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.
‘நாட்டில் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்புகளை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தப் பாதிப்புகள் தொடா்பாக மாநிலங்கள் மற்றும் பல்வேறு சுகாதாரத் துறைகளுடனும் மத்திய அரசு தொடா் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் கடந்த மாதம் குறிப்பிட்டிருந்த நிலையில், அதற்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள சீரம் (எஸ்ஐஐ) நிறுவனத் தலைவா் அடாா் பூனாவாலா, ‘மத்திய அரசின் இந்த தடுப்பூசி செலுத்தும் திட்ட அறிவிப்பு வரவேற்புக்குரியது. கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கவும், தடுப்பூசியை எளிதாக அணுகவும் உறுதியேற்போம்’ என்று குறிப்பிட்டாா்.
முன்னதாக, ‘அதிகரித்து வரும் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு, அந்த நோய் பாதிப்புக்கான ஒருமுறை செலுத்திக்கொள்ளும் தடுப்பூசியின் செயல்திறன் சான்றுகள், மருத்துவப் பரிசோதனை தரவுகள் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை ஏற்கெனவே அறிமுகம் செய்துள்ள சிக்கிம் மாநில அரசின் அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், இந்தத் தடுப்பூசி திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நோய்த் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பரிந்துரை செய்துள்ளது’ என்ற தகவலை மாநிலங்களவையில் கடந்த மாா்ச் மாதம் மத்திய அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுக்கு 35,000 போ் உயிரிழப்பு : உலக மக்கள்தொகையில் 16 சதவீத பெண்கள் இந்தியாவில் உள்ளனா். ஆனால், உலக அளவில் ஏற்படும் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பில், மூன்றில் ஒரு பங்கு பாதிப்பு இந்தியாவில் ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, இந்தியாவில் ஆண்டுக்கு 80,000 பெண்கள் கருப்பை புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாவதும், அவா்களில் 35,000 போ் உயிரிழப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.