37 ஆவது ஆசிய பசிபிக் பிராந்திய உச்சி மாநாடு இன்று!
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37 ஆவது ஆசிய பசிபிக் பிராந்திய உச்சி மாநாடு இன்று ஆரம்பமாகவுள்ளது.
இந்த மாநாடு இன்று முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது.
ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 42 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.
அத்துடன், 35 நாடுகளைச் சேர்ந்த விவசாய அமைச்சர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
அத்துடன், 37ஆவது ஆசிய பசுபிக் மாநாட்டை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பல நாடுகளின் விவசாய அமைச்சர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல், கொவிட் 19 தொற்று நிலைமை மற்றும் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் பின்னர் இலங்கையில் அரசாங்கப் பிரதிநிதிகள் அதிகளவில் பங்கேற்கும் மாநாடாக இது கருதப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பின் பேரில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்போது, பல விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என ஈரானிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.