சிறீதரனுக்கு சம்பந்தன் அறிவுறுத்தல்!

சிறீதரனுக்கு சம்பந்தன் அறிவுறுத்தல்!

”இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகிகள் தெரிவு தொடர்பில் இணக்க அடிப்படையில் எட்டப்பட்ட முடிவுகளை பொதுச் சபை அங்கீகரிக்காதவிடத்து அல்லது அந்தத் தெரிவுகளில் குழப்பங்கள் நிலவுமிடத்து,தேர்தல் முறைமை மூலம் தெரிவுகளை நடத்துங்கள். அன்றைய தினமே மாநாட்டையும் நடத்தி முடியுங்கள்!”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேரடியாக அறிவுறுத்தியுள்ளார்.

‘சூழ்ச்சிகளை முறியடித்து மாநாட்டை நடத்துக.! – சம்பந்தன் அறிவுறுத்தல்’ – என்ற தலைப்பில் சிறீதரனின் ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்த விடயம் அடங்கியுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

உட்கட்சி ஜனநாயகத்தைச் சிதைக்கும் வகையில் நடைபெறும் சூழ்ச்சிகளை முறியடித்து, உடனடியாக மாநாட்டை நடத்துமாறு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரனுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகிய இருவரும் இணைந்து கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் அவரைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமைப் பொறுப்பை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்வதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், நிர்வாகிகள் தெரிவு தொடர்பில் இணக்க அடிப்படையில் எட்டப்பட்ட முடிவுகளைப் பொதுச் சபை அங்கீகரிக்காதவிடத்து அல்லது அந்தத் தெரிவுகளில் குழப்பங்கள் நிலவுமிடத்து, தேர்தல் முறைமை மூலம் தெரிவுகளை நடத்தி, அன்றைய தினமே மாநாட்டையும் நடாத்துமாறு அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. – என்றுள்ளது.

சிறீதரனின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தொடர்பில் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனிடம் நாம் வினவியபோது, “சொல்ல வேண்டிய விடயங்களைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிறீதரனிடம் கூறிவிட்டேன். இனி அவர் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பார்” – என்று பதிலளித்தார்.

CATEGORIES
TAGS
Share This