மாத்தளையில் வெங்காய பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் விசேட வேலைத்திட்டம்!
மத்திய மாகாண விவசாய திணைக்களத்தினால் மாத்தளை மாவட்டத்தில் வெங்காய பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மாத்தளை பிரதி விவசாய பணிப்பாளர் காரியாலயத்தின் விவசாய ஆலோசகர் அஜந்தா அபேசேகர இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, மாத்தளை மாவட்டத்தில் பெரிய வெங்காயச் செய்கைக்கு ஏற்ற சூழல் உள்ள தம்புள்ளை, கலேவெல, நாவுல, மகுலுகஸ்வெவ, கொங்கஹவெல, கிம்பிஸ்ஸ உள்ளிட்ட பல பிரதேசங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு சென்று பெரிய வெங்காயம் செய்கை குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
விவசாய ஆலோசகர்கள், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பல்வெஹெர மற்றும் குண்டசாலை விவசாயக் கல்லூரியைச் சேர்ந்த 100 மாணவர்களும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஏப்ரல் மாதத்திற்குள் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் வெங்காய பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.