வெற்றி துரைசாமி உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெற்றி துரைசாமி வீட்டிற்கு சென்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினார். பிறகு சைதை துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் சுகாதார துறை அமைச்சர் மா சுப்ரமணியன் நேரில் அஞ்சலி செலுத்தினார். முதல்வர் மட்டுமின்றி வெற்றி துரைசாமியின் உடலுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, வைகோ, சசிகலா, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அன்புமணி ராமதாஸ், எடப்பாடி பழனிசாமி உள்பட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
சென்னையில் வெற்றி துரைசாமியின் உடல் வைக்கப்பட்டு இருந்த வீட்டிற்கு பொது மக்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, பயணம் செய்த கார் கஷங் நாலா என்ற மலைப்பகுதியில் வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தாக்கு பகுதியில் விழுந்து, அருகே ஓடிக்கொண்டிருந்த சட்லஜ் நதிக்குள் பாய்ந்தது.
நதியில் 5 கி.மீ. தொலைவுக்கு அடித்து செல்லப்பட்டு இருந்த வெற்றி துரைசாமியின் உடலை உள்ளூர் நீச்சல் வீரர்கள் கண்டுபிடித்து மீட்டனர். 8 நாட்களுக்கு பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டது. பின்னர் சிம்லாவில் உள்ள மருத்துவமனையில் வெற்றி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.