உக்ரைன் இராணுவ தலைமை தளபதி மாற்றம்?
உக்ரைன் ரஷ்யா இடையே தொடர்ந்து நீடித்து வரும் போர், 3-வது ஆண்டில் அடியெடுத்து வைக்க இன்னும் சில நாள்களே உள்ளன. இருதரப்பும் போர் நிறுத்தத்துக்கான நடவடிக்கையில் முனைப்புக் காட்டாமல் தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றன.
இத்தகைய சூழலில், உக்ரைன் இராணுவ தலைமை தளபதி வலேரி ஜலுஷ்னி மற்றும் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி இடையே கருத்து மோதல் நீடித்து வந்த நிலையில், இராணுவ தலைமை தளபதி பொறுப்பிலிருந்து விலகுமாறு கடந்த வாரம் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி அறிவுறுத்தினார். ஆனால் ஜனாதிபதியின் முடிவை ஏற்றுக்கொள்ள அவர் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இந்நிலையில், வலேரி ஜலுஷ்னி உக்ரைன் இராணுவ தலைமை தளபதி பதவியை விட்டு நீக்கப்படுவது ஜனாதிபதியின் பேட்டி மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீர் ஸெலென்ஸ்கி அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது,
“ஒரு புதிய தொடக்கம் அவசியமானது. இராணுவ தலைமை மாற்றம் குறித்து ஆலோசித்து வருகிறேன், இது ஒரு தனிநபரைச் சார்ந்ததல்ல, நாட்டின் தலைமை எந்த திசையில் நாட்டை வழிநடத்துகிறது என்பதை பொறுத்தது.
இராணுவம் மட்டுமன்றி பல துறைகளிலும் தலைவர்களை மாற்றம் செய்வது குறித்து பேசுகிறேன். நாம் வெற்றி பெற வேண்டுமெனில், நாம் அனைவரும் கட்டாயம் ஒரே திசையில் உந்திச் செல்ல வேண்டும்.நம் கைகளை தளர்ந்துவிட விடக்கூடாது. நேர்மறையான ஆற்றல் அனைவருக்கும் கட்டாயம் இருக்க வேண்டும்” என்று ஜனாதிபதி ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.