பெலியத்த படுகொலை – சந்தேகநபர் டுபாய்க்கு தப்பியோட்டம்!
பெலியத்த ஐவர் படுகொலையின் பிரதான துப்பாக்கிதாரி டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெலியத்தவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டதில் பிரதான துப்பாக்கிதாரியாக செயற்பட்டவர் ஓய்வு பெற்ற கடற்படை சிப்பாய் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபரின் 39 வயது மனைவி மற்றும் 72 வயதான தந்தை ஆகியோர் நேற்று (01) கைது செய்யப்பட்டதை அடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.
பல்லேவெல, முத்தரகம, பாதகம பிரதேசத்தில் பதுங்கியிருந்த போதே பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாமின் அதிகாரிகள் குழுவினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 21 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
பிரதான துப்பாக்கிதாரியான, ஓய்வுபெற்ற கடற்படை சிப்பாய், கொலைக்கு முந்தைய நாள் பெலியத்த பகுதிக்கு பேருந்தில் சென்று மேலும் இரண்டு துப்பாக்கிதாரிகளுடன் இணைந்துகொண்டதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
கொலைக்குப் பின்னர், பிரதான துப்பாக்கிதாரி துபாய்க்குத் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவருக்கு விமான டிக்கெட்டுகளை துபாயில் வசிக்கும் நிபுன என்ற நபர் ஏற்பாடு செய்துள்ளார்.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, கடந்த வருடம் ஜூன் மாதம் 17 ஆம் திகதி ரத்கம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் சீனிகம கோவிலுக்கு அருகில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பிலான தகவலும் தெரியவந்துள்ளது.
ரத்கம பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் துலாஜ் தரங்க என்ற நபரே சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
தொடன்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதியும், முத்தரகம பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞரும் இதற்கு உதவியதாக சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
அதன்படி செயற்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகள், குறித்த சந்தேகநபர்களையும் நேற்று முன்தினம் (01) கிரிபத்கொட பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
23 வயதுடைய சந்தேகநபரிடம் 5 கிராம் 580 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டதுடன், பலபிட்டிய நீதவான் நீதிமன்றினால் அவருக்கு திறந்த பிடியாணை ஒன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மறைந்திருக்க உதவிய 45 வயதுடைய மற்றுமொரு நபரும் ஹுனுபிட்டிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, பெலியத்தவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல ஆதரவளித்த ரத்கம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டு தங்காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது, சந்தேகநபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தங்காலை பதில் நீதவான் உத்தரவிட்டார்.