சைவத்துக்கு மாற விரும்புவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்!

சைவத்துக்கு மாற விரும்புவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்!

அதிகப்படியான உடல் கொழுப்பைக் குறைக்க, மருத்துவ சிகிச்சைக்காக அல்லது உடல் எடையைக் குறைக்க என பல்வேறு காரணங்களால் ஒருவர் அசைவ உணவிலிருந்து சைவத்துக்கு மாற விரும்பலாம்.

இவையல்லாமல், நாம் வாழும் சுற்றுப்புறத்துக்கு ஏற்பவும், பணியிடங்களுக்கு ஏற்பவும் கூட ஒருவர் அசைவத்தை கைவிட நினைக்கலாம்.

காரணம் எதுவாக இருந்தாலும். அசைவத்திலிருந்து சைவத்துக்கு மாற விரும்புவோர் நிச்சயம் இந்த முக்கியமான விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எடுத்த எடுப்பிலேயே அசைவ உணவுகளைக் கண்டும் காணாமல் போய்விட முடியாது. கூடவும் கூடாது. வாரத்தில் ஒரு நாள் நிச்சயம் அசைவம் இல்லை அல்லது வாரத்தில் இந்த நாள்களில் மட்டும் அசைவம் கிடையாது என்று ஆரம்பிக்கலாம். அப்படியே அசைவத்தை விட்டுவிடும் நாள்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த காய்கறிகளை சாப்பிடுங்கள்.
எதுவாக இருந்தாலும் உங்களை வருத்திக் கொள்ளாமல், பிடித்த வழக்கத்தில் செயல்படுத்துங்கள்.

அசைவ உணவை அதிகம் விரும்பி சாப்பிடுபவராக இருந்தால், அதனை ஒரேயடியாகக் கைவிடத் தொடங்கும் போது, மிகவும் ருசியான சைவ உணவுகளைத் தேடி தேடி சாப்பிட வேண்டும்.

பார்க்கும் போதே வாய் ஊறும் உணவுகளைத் தேடி அது எங்கு கிடைக்கும் என்று பார்த்து பார்த்து தேடிச் சென்று சாப்பிடுங்கள். இது அசைவ உணவின் மீதான விருப்பத்தை திசை மாற்ற உதவும். ஆனால் பழைய உணவுகளும் உங்கள் தட்டில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

அசைவ உணவுகளைப் போன்றே சுவை தரும் சில உணவுகள் உள்ளன. அவற்றைப் பற்றி நண்பர்களிடம் அல்லது இணையத்தில் தேடி கண்டுபிடித்து வைத்துக் கொள்ளுங்கள். எப்போதாவது உங்களுக்கு மிகவும் பிடித்த அசைவ உணவை சாப்பிட வேண்டும் என்றால், அதற்கு இணையான சுவை கொண்ட உணவுகளை வரவழைத்து சாப்பிடலாம். உங்களுக்கு அதில் மிகவும் பிடித்த உணவு கிடைக்கும் வரை அசைவ உணவுகளுக்கு இணையான ருசி கொண்ட உணவுகளைத் தேடுங்கள்.

கறி மற்றும் அசைவ உணவுகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள், திடிரென காய்கறிக்கு மாறும்போது ஏற்படும் புரத இழப்பை சமன் செய்ய வேண்டும். அதற்கு புரதம் அதிகம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கருப்பு பீன்ஸ், தினை, முட்டை, சீஸ், பருப்பு வகைகள், விதைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள மறக்கக் கூடாது.

காய்கறிகள், சைவ உணவுப் பொருள்கள், துரித உணவு பொருள்கள் வாங்கி வைக்கும் அலமாரிகளை எப்போதும் காலியாக வைக்காதீர்கள். உங்களுக்குப் பிடித்த காய்கறிகளை தேவையான அளவுக்கு வாங்கி நிரப்பி வையுங்கள். எப்போது பசித்தாலும் எதுவும் இல்லை என்று நினைக்காத வகையில், சைவ உணவுகள் அதுவும் உங்களுக்குப் பிடித்த உணவுகள் எப்போதும் இருக்குமாறு அமைத்துக் கொள்ளுங்கள்.


எனவே, அசைவ உணவிலிருந்து சைவத்துக்கு மாறுவது என்பது அவ்வளவு கடினமான விஷயம் ஒன்றும் இல்லை. மனம் இருந்தால் வழியும் இருக்கிறது.

CATEGORIES
TAGS
Share This