பெப்ரவரி 1ஆம் திகதியிலிருந்து வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே வேலை!

பெப்ரவரி 1ஆம் திகதியிலிருந்து வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே வேலை!

உலகில் பல வளர்ந்த நாடுகள் குறைவான வேலை நேரத்தைக் கடைபிடிக்கின்றன. பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், அவுஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் குறைந்த வேலை நேரங்கள் பரவலாக கடைபிடிக்கப்படுகின்றன. இந்தப் பட்டியலில் தற்போது ஜெர்மனியும் இணைந்துள்ளது.

ஜெர்மனி பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள புதிய சோதனை முயற்சியை மேற்கொள்ளவிருக்கிறது. வரும் பெப்ரவரி 1 முதல், வாரத்தில் நான்கு நாள்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

வாரத்தில் மூன்று நாள்கள் விடுமுறையும், நான்கு நாள்களுக்கு வேலையும் செய்வதன் மூலம் பணியாளர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியமடைவதோடு அவர்களது செயல்திறனும் அதிகரிக்கும் என ஜெர்மனி எதிர்பார்க்கிறது.

பல தொழிலாளர் சங்கங்கள் இந்த 4 நாள்கள் வேலையை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என வாதித்து வந்தன. இந்நிலையில் அமலுக்கு வரவிருக்கும் இந்த சோதனை நடைமுறை, நல்ல பிரதிபலன்களை அளிக்கும் என தொழிற்சங்கங்களும் அரசும் எதிர்பார்க்கின்றன. இந்த சோதனையில் ஜெர்மனியின் 45 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

வாரத்தில் 5 அல்லது 6 நாள்கள் வேலை செய்வதைவிட, வாரத்தில் 4 நாள்கள் மட்டும் வேலை செய்வது ஒரு நிறுவனத்தின் உற்பத்தித் திறனை அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என ஜெர்மனி எதிர்பார்க்கிறது. இந்த சோதனை அடுத்த ஆறு மாதங்களுக்கு ஜெர்மனியில் மேற்கொள்ளப்படுகிறது.

உற்பத்தித் திறனை அதிகரிப்பதன்மூலம் ஜெர்மனியில் நிலவும் குறைந்த பணியாளர்கள் பிரச்னையும் தீர்வுக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

மேலும், பெல்ஜியத்தில் வாரத்திற்கு நான்கு நாள்கள் மட்டுமே மக்கள் வேலை செய்கிறார்கள். அதாவது, வாரத்தில் 40 மணிநேரம் வேலை. நெதர்லாந்தில் வாரத்திற்கு 29 மணிநேரம் மட்டுமே மக்கள் வேலை செய்கிறார்கள். வாரத்தில் நான்கு நாள்கள் மட்டுமே அவர்களுக்கு வேலை. இந்த நடைமுறைகள் நல்ல பலன்களை அளிப்பதாக பல நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
Share This