யாழில் விழிப்புணர்வு நடைபவனி!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நடைபவனி திருநெல்வேலி சந்தி முதல் யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் வரை இடம்பெற்றது.
வட மாகாண சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடைபவனி திருநெல்வேலி சந்தியில் ஆரம்பமாகி, பலாலி வீதி வழியாக பரமேஸ்வரா சந்தியினை அடைந்து, அங்கிருந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலை அடைந்தது.
இந்த விழிப்புணர்வு நடைபவனியில் வட மாகாண சுகாதார பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன், நல்லூர் பிரதேச செயலாளர் யசோதா உதயகுமார், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி, கோப்பாய் பொலிஸார், சுகாதார பரிசோதர்கள், மருத்துவ தாதியர், யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தனியார் கல்வி நிறுவன மாணவர்கள், நல்லூர் பிரதேச சபையினர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது டெங்கு நோய் தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
அத்துடன், பொது சுகாதார பரிசோதகர்களால் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.