இளையராஜாவின் இசை நிகழ்ச்சி தொடர்பில் ஏற்பாட்டுக் குழுவின் அறிவிப்பு!

இளையராஜாவின் இசை நிகழ்ச்சி தொடர்பில் ஏற்பாட்டுக் குழுவின் அறிவிப்பு!

இசைஞானி இளையராஜாவின் புதல்வியும் பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல்நலக் குறைவால் தமது 47 வயதில் நேற்று காலமானார்.

புற்றுநோய் காரணமாக அவருக்கு கடந்த 5 மாதங்களாக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில், அவர் நேற்று மாலை காலமானார்.

இன்றைய தினம் அவரின் பூதவுடல் சென்னைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

பாடகி பவதாரிணி பாரதி படத்தில் மயில் போல, ராமர் அப்துல்லா படத்தில் என்வீட்டு ஜன்னல், தாமிரபரணி படத்தில் தாலியே தேவை இல்லை உள்ளிட்ட பாடல்களையும் பவதாரிணி பாடியுள்ளார்.

பாரதி படத்தில் மயில் போல பொண்ணு பாடலுக்காக அவருக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

இதேவேளை, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர், நேற்றிரவு இலங்கை வந்துள்ளதுடன், அவரின் உடலை பொறுப்பேற்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவும் இந்தியா நோக்கி இன்றைய தினம் புறப்படவுள்ளார். நாளை மற்றும் நாளை மறுதினம் கொழும்பில் இடம்பெறவிருந்த இசை நிகழ்வொன்றுக்காக கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அவர் நாட்டை வந்தடைந்தார்.

இந்தநிலையில், கொழும்பில் இடம்பெறவிருந்த குறித்த இசைநிகழ்வினை மறு அறிவித்தல் வரை பிற்போடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

குறித்த இசை நிகழ்வுக்காக வழங்கப்பட்ட நுழைவு சீட்டுக்களை, மீண்டும் திகதி அறிவிக்கப்படும் போது, அதனை பயன்படுத்த முடியும் என ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This