கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

6ஆவது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்போட்டி சென்னையில் நடைபெறுகிறது. தென் இந்தியாவில் முதல் முறையாக இந்தப்போட்டி தமிழகத்தில் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியின் கோலாகல தொடக்க விழா நேரு ஸ்டேடியத்தில் இன்று மாலை 6 மணியளவில் தொடங்கியது.

முன்னதாக, சென்னை வந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி ஐஎன்எஸ் அடையார் தளத்திற்கு சென்றார்.

பிறகு, அடையாறில் இருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக நேரு விளையாட்டு அரங்கிற்கு பிரதமர் மோடி வருகை தந்தார். வழி நெடுகிலும் கலை நிகழ்ச்சிகளை ரசித்தபடியே பிரதமர் மோடி காரில் பயணித்தார். அவருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடி தொண்டர்களை பார்த்து கையசைத்தவாறு சென்றார். பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரிகள் அனுராக் தாக்கூர், நிசித் பிராமணிக், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி இன்று (19) முதல் 31ஆம் திகதி வரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது.

18 வயதுக்குட்பட்ட பிரிவில் நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 1600 க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களும், ஆயிரம் நடுவர்களும் கலந்து கொள்கிறார்கள். 1200 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்தப் போட்டிக்காக ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, இன்று சென்னையை அடுத்து நாளை திருச்சி மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்கு செல்கிறார்.

CATEGORIES
TAGS
Share This