பணி பகிஷ்கரிப்பில் தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள்!

பணி பகிஷ்கரிப்பில் தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள்!

அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் முன்னெடுக்கப்படும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அமைவாக, பல்கலைக்கழக சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கம் முன்னெடுத்த ஒருநாள் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று 2024.01.18 ஆம் திகதி கல்விசாரா ஊழியர் சங்க தலைவர் எம்.ரீ.எம். தாஜுதீன் மற்றும் செயலாளர் எம்.எம்.முஹம்மட் காமில் ஆகியோரது தலைமையில் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் இடம்பெற்றது.

அண்மையில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கின் காரணமாக பல்கலைக்கழகத்தின் சில பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தன. வெள்ளம் ஏற்பட்ட நாள்முதல் கடுமையான சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த குறித்த கல்விசாரா ஊழியர்கள் இன்றைய அனைத்து வகையான பணிகளையும் இடைநிறுத்தி பணி பகிஷ்கரிப்பிலும் பாரிய ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

குறித்த பணி பகிஷ்கரிப்பின் காரணமாக பல்கலைக்கழக வளாகம் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.

அரசாங்கத்தினால் பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறைப்பு, மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அரசாங்கம் போதிய நடவடிக்கை எடுக்காமை, பல்கலைக்கழக ஊழியர்களுக்கு நீண்டகாலமாக வழங்கப்படாதுள்ள சம்பள அதிகரிப்பை வழங்க கோருதல், அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கேற்ப ஊதிய அதிகரிப்புச் செய்ய வலியுறுத்தல், பல்கலைக்கழகங்களில் காணப்படும் பதவி வெற்றிடங்களை நிரப்பி நிருவாக விடயங்களை சுமுகமாக முன்னெடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளல், பல்கலைக்கழக ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை சீராக்குதல், இலவச உயர்கல்வி முறைமையை ஒழித்து தனியார் பல்கலைக்கழகங்களை ஊக்குவிக்கும் அரசின் சிந்தனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தல், ஊழியர் சேமலாப மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிகளை வேறு தேவைகளுக்கு பயன்டுத்தும் அரசின் எத்தனங்களுக்கு எதிர்ப்பு வெளியிடல், அரசின் செயற்பாடுகள் காரணமாக கல்விமான்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதால் நாட்டின் கல்விக் கட்டமைப்பில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க தவறியமை உட்பட பல்வேறு விடயங்களை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டத்தின் இறுதியில் ஊழியர்கள் தாமாக முன்வந்து வெள்ளத்தினால் சிதைவடைந்து கிடந்த வீதியை சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.

CATEGORIES
TAGS
Share This