காணும் பொங்கல் கொண்டாட்டம்- மெரினா கடற்கரையில் குவிந்த மக்கள்!

காணும் பொங்கல் கொண்டாட்டம்- மெரினா கடற்கரையில் குவிந்த மக்கள்!

தை திருநாளை முன்னிட்டு, நேற்று மாட்டுப் பொங்கலும், இன்று காணும் பொங்கலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

காணும் பொங்கலான இன்று தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் பொது மக்கள் கூட்டம் கூட்டமாக கூடியுள்ளனர். இதனால் கடற்கரை பகுதிகள், பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த ஆண்டும் காணும் பொங்கலை வழக்கமான உற்சாகத்தோடும், மிகுந்த ஆர்வமுடன் கொண்டாடி வருகின்றனர்.

இதேபோல், சென்னையில் மெரினா கடற்கரையில் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர்.

முன்னதாக, மெரினாவில் கூடும் மக்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.

போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் தர்மராஜ் ஆகியோர் மேற்பார்வையில் மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.

மெரினா கடற்கரை எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட கடலோர பகுதிகள் முழுவதிலும் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

காணும் பொங்கல் தினத்தில் திரளாக மக்கள் கூடுவார்கள் என்பதால் அன்றைய தினம் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This